கோவை:அரசூர் கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் விளையாட்டு தின விழாவில், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டுபரிசுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு தின விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள், பச்சை, சிவப்பு, மஞ்சள், வெள்ளை என நான்கு குழுக்களாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. 100 மீ., 200மீ., 400மீ., குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப்போட்டிகளும், கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், ஹேண்ட்பால் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, பச்சை நிற அணி, 107 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அதை தொடர்ந்து, மஞ்சள்அணி, 105 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்தது. மாணவிகள் பிரிவில் தனிப்பட்ட சாம்பியன் பட்டத்தை, பி.காம்., மாணவி, வனஜா பெற்றார். மாணவர்கள் பிரிவில் பி.காம்., மாணவர் ஜெகன் பெற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அர்ஜூனா விருது பெற்ற பாஸ்கரன் (மிஸ்டர் வேர்ல்ட்) மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். அவர் பேசுகையில், ''கல்லுாரி பருவத்தில், மாணவர்கள் விளையாட்டின் மூலம் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
எனவே, கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.விளையாட்டு தின விழாவில், கல்லுாரியின் தலைவர், ராமசாமி, முதல்வர், பாலுசாமி, உடற்கல்வித்துறை இயக்குனர் முனுசாமி மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.