திருவாடானை, ''20 ஆண்டுகளாக குறைந்த அழுத்த மின்சப்ளையால் மின்சாதன பொருட்களை பயன்படுத்தமுடியாமல் 3 கிராம மக்கள் தவிக்கின்றனர்,'' என , திருவாடானை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.
இந்த ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முகமதுமுக்தார் தலைமையில் நடந்தது. துணை தலைவர் செல்விபாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, இளங்கோ, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
முகமதுமுக்தார், தலைவர் : திருவாடானை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எஸ்.பி.பட்டினம், புல்லக்கடம்பன் ஊராட்சிகளுக்கு போதுமான நீர் சப்ளை ஆவது இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முருகேசன்,குடிநீர்வடிகால்வாரிய அலுவலர், திருவாடானை:ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியங்களில் 11 கூட்டுகுடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. போதுமான அளவு சப்ளை இல்லாததால் கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி மோட்டார் பழுது ஆவதும் பிரச்னையாக உள்ளது.
மதிவாணன்,கவுன்சிலர்: மோட்டார் பழுது காரணம் காட்டி பல நாட்கள் சப்ளை நிறுத்தப்படுகிறது.
சிவா, கவுன்சிலர்: பாகனுார் ஊராட்சி இலஞ்சியமங்கலம், கிடங்கூர், மெக்கவயல் கிராமங்களில் குறைந்த அழுத்த மின்சப்ளையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக டி.வி., பிரிட்ஜ், மின்விசிறி போன்ற மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம். கிடங்கூரில் புதிய டிரான்ஸ்பார்மர், சிறுகம்பையூர், பாகனுாரில் ஆழ்துளை கிணறு அமைக்கவேண்டும்.
மகாலிங்கம்,மின்வாரிய அலுவலர்: புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க திட்டம் தயாரிக்கபட்டுள்ளது. அனுமதி வழங்கியவுடன் அமைக்கப்படும்.
சசிகுமார்,கவுன்சிலர்: பெரியகீரமங்கலம் ஊராட்சியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10க்கு விலைக்கு வாங்கப்படுகிறது. கோனேரிகோட்டை சாலையை சீரமைக்கவேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. மேலாளர் ரவி நன்றி கூறினார்.