கோவை:மாவட்ட அளவிலான 'பி' டிவிஷன் கால்பந்து போட்டியில், பிஷப் அப்பாசாமி அணி ஐந்து கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கால்பந்து கழகம் (அடாக் கமிட்டி) சார்பில், சீனியர் ஆண்களுக்கான கால்பந்து லீக் போட்டி, சுங்கம் கார்மல் கார்டன் பள்ளியில் நடக்கிறது.நேற்று முன்தினம் நடந்த போட்டியில், 'பிளட் ரெட்ஸ் எப்.சி.,' மற்றும் பிஷப் அப்பாசாமி கல்லுாரி எப்.சி., அணிகள் மோதின.
ஆட்டத்தின் துவக்கம் முதலே அப்பாசாமி அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். அப்பாசாமி அணியின், விசால் (7,9,14 நிமிடங்கள்) ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். வினோத் 54வது நிமிடத்தில் ஒரு கோல், அரவிந்த் 60வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, அப்பாசாமி அணியின் கோல் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர். எதிரணியை கோல் அடிக்க விடாமல், சிறப்பான தடுப்ப ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.ஆட்ட நேர முடிவில், அப்பாசாமி அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
* வாகா எப்.சி., மற்றும் அத்யாயனா மோதிய மற்றொரு போட்டி, 1 - 1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. வாகா அணிக்காக தினேஷ் சந்திரன்; அத்யாயனா அணிக்காக சபீர் ஹசன் தலா ஒரு கோல் அடித்தனர்.