கோவை:மாநில அளவில் சிறுவர்களுக்கான கோ கோ 'லீக்' போட்டியின் மாணவர்கள் பிரிவில் கோவை, சிவகங்கை மாவட்ட அணிகளும், மாணவியர் பிரிவில் கிருஷ்ணகிரி, சிவகங்கை அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
தமிழ்நாடு கோ கோ கழகம், கோவை மாவட்ட கோ கோ கழகம் மற்றும் எம்.டி.என்., பள்ளி இணைந்து நடத்தும், ஆறாம் ஆண்டு 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான கோ கோ போட்டி, சூலுார் எம்.டி.என்., பள்ளி மைதானத்தில் நடந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, மாணவர் பிரிவில், 17 அணிகளும், மாணவியர் பிரிவில், 14 அணிகளும் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் 'லீக்', 'நாக் அவுட்' முறையிலும் நடந்தது. லீக் முறையில் சிறப்பாக விளையாடி, எட்டு அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
மாணவர் பிரிவு
இதில், கோவை மாவட்ட அணி காலிறுதியில், 18 - 3 என்ற புள்ளிக்கணக்கில், திருப்பூர் மாவட்ட அணியையும், அரையிறுதியில், 15 - 4 என்ற புள்ளிக்கணக்கில், சேலம் மாவட்டத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இதேபோல் சிவகங்கை மாவட்ட அணி காலிறுதியில், 19 - 11 என்ற புள்ளிக்கணக்கில், ஈரோடு மாவட்ட அணியையும், அரையிறுதியில், 19 - 15 என்ற புள்ளிக்கணக்கில், கன்னியாகுமரி மாவட்ட அணியையும் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மாணவிகள் பிரிவு
காலிறுதிப்போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்ட அணி, 12 - 0 என்ற புள்ளிக்கணக்கில் கள்ளக்குறிச்சி அணியையும், அரையிறுதியில் 8 - 6 என்ற புள்ளிக்கணக்கில் கோவை அணியையும் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இதேபோல், சிவகங்கை மாவட்ட அணி, 19 - 1 என்ற புள்ளிக்கணக்கில் கடலுார் அணியையும், அரையிறுதியில் 11 - 2 என்ற புள்ளிக்கணக்கில், கன்னியாகுமரி மாவட்ட அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.