கோவை:கோவையில் தெரு நாய்களால் மக்களிடம் பீதி அதிகரித்து வரும் சூழலில், தன்னார்வலர்கள் உதவியுடன் நாய்கள் கணக்கெடுக்கப்பட்டு, வெறிநாய் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோவைமாநகரில் கூட்டமாக திரியும் தெரு நாய்களால், மக்கள் கடிக்கு ஆளாவதுடன், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் துயரங்களும் நடக்கின்றன. நாய்களை கொல்ல தடை இருப்பதால், சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதுாரில் உள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் வாயிலாக, நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.வெறிநாய் கடி தடுப்பூசியும்(ரேபிஸ்) செலுத்தி பிடித்த இடத்திலேயேவிடுவிக்கப்படுகிறது.
ஒரு மாதத்துக்குமுன்பு, 42வது வார்டு வேலாண்டிபாளையத்தில்வெறிநாய் ஒன்று எட்டு பேரை கடிக்க, பாதிக்கப்பட்டோர் உரிய சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது.கடந்த மாதம், கவுண்டம்பாளையம் 34வது வார்டு மருதம் நகரில் ஐந்து நாய்கள் ஆட்டுக்குட்டி ஒன்றை துரத்தி கடித்து குதறிய வீடியோ வைரலானது. கடிக்கும் நாயின் நோய் தன்மை தெரியாததால், உயிருக்கே ஆபத்தாகலாம். இதனால்மக்களிடையே பீதி அதிகரித்து வருகிறது.
இச்சூழலில், முதற்கட்டமாக கிழக்கு மண்டலத்தில் தெரு நாய்களை கணக்கிட்டு, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது, மக்களிடம் ஓரளவு நிம்மதியை தந்துள்ளது.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை துரிதப்படுத்த, மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில், தனியார் நிறுவனம் மூலம், 20 முதல், 25 தன்னார்வலர்கள் உதவியுடன், தகுந்த நெறிமுறைகளை பின்பற்றி வீடற்ற நாய்கள் குறித்த, புள்ளி விபரம் நாளை(இன்று) முதல் கணக்கெடுக்கப்படுகிறது. பணிகள் முடிந்த பின் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என, அறிக்கையில்தெரிவித்துள்ளார்.
வீட்டு நாய்க்கும் 'மஸ்ட்'
வீட்டு வளர்ப்பு நாய்களை வெளியே விடும்போது, வெறி நோய் பாதித்த தெரு நாய்கடித்தால் நோய் தொற்றுகிறது. எனவே, வீட்டு நாய்களுக்கும் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை, 'ரேபிஸ்' தடுப்பூசி போட வேண்டும் என்கின்றனர், கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தினர்.