விழுப்புரம்:விழுப்புரம் ரயில் நிலையத்தில், மத்திய ரயில் பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ரயில்வே வாரியம் மூலம் வழங்கப்படும் வசதிகள் முறையாக கிடைக்கிறதா என ஆய்வு செய்து, அதன் அறிக்கையை அளிக்க 5 பேர் கொண்ட மத்திய ரயில் பயணிகள் சேவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், ஜெயந்திலால் ஜெயின், பிரமோத்குமார்சிங், பபிதாபார்மர், மோகன்லால் கிகாரா, பாலகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பாலகணபதியை தவிர்த்து மீதமுள்ள 4 பேரும் நேற்று மாலை 5:00 மணியளவில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ரயில்வே டிக்கெட் கவுண்டருக்கு அருகே உள்ள கட்டண கழிவறையில் ஆண், பெண் இருவருக்கும் கட்டணம் வாங்கும் பணியில் ஒரே ஒரு பெண் ஊழியர் மட்டுமே இருந்தார்.பணியில் ஆண், பெண் தனித்தனியே இருக்க வேண்டும். அவர்களுக்காக தினக்கூலி சரியாக வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.பிளாட்பாரத்தில் தண்ணீர் குடிக்கும் இடத்தில், அதற்கான பலகையை வைக்க வேண்டும்.
மேலும், 1வது பிளாட்பாரத்தில், தரைதளம் சேதமாகிய பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும்.இந்த பணிகளை எல்லாம் செய்யாமல், அதற்கான அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என அலுவலர்களுக்கு, மத்திய பயணிகள் சேவை குழுவினர் டோஸ் விட்டதால் பரபரப்பு நிலவியது.ஆய்வின் போது, ரயில் நிலைய கண்காணிப்பாளர் மருதமுத்து, பொறியாளர் அம்ப்ரோஸ் உட்பட எலக்ட்ரிக்கல், தொழில்நுட்பம், வணிகவியல், பாதுகாப்பு பிரிவு ரயில்வே அலுவலர்கள் உடனிருந்தனர்.