வீட்டின் முன் புதர்
உடுமலை சத்திரம் வீதியில், வீட்டின் முன் கடந்த சில நாட்களாக செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இதனால், விஷ ஜந்துகள் ஜாலியாக உலா வருகின்றன. அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்செடிகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விஜயகுமார், சத்திரம்வீதி.
பாதியில் நிற்கும் பணி
உடுமலை நகராட்சி நாராயணன் காலனியில், மழைநீர் வடிகால் கட்டும் பணி பாதியிலே நிற்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.
பராமரிப்பில்லாத கழிப்பிடம்
உடுமலை தாலுகா அலுவலகம் பின்புறம், பராமரிப்பின்றி பொதுகழிப்பிடம் உள்ளது. இதனை அங்குள்ள அலுவலர்கள், பொதுமக்கள் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படுகிறது. இதை பராமரித்து சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சதீஷ்குமார், உடுமலை.
கழிவுநீர் தேக்கம்
உடுமலை பைபாஸ் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாயை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.- முருகன், உடுமலை.
பொலிவுபடுத்த வேண்டும்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுப்பகுதி அழகுபடுத்தப்படாததால், பொலிவிழந்து காணப்படுகிறது. அங்கு நீரூற்று அமைத்து பொலிவுபடுத்த வேண்டும்.- சங்கர்ராமன், உடுமலை.
சேதமடைந்த ரோடு
உடுமலை, ஜீவா நகர் முதல் கண்ணமநாயக்கனுார் வரை செல்லும் 3 கி.மீ., ரோடு மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட வேண்டியதுள்ளது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ரோட்டை சரிசெய்ய வேண்டும்.- கணேசன், உடுமலை.
ஒழுங்குபடுத்தணும்
உடுமலை வ.உ.சி., வீதியில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், பிறவாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.- கந்தசாமி, உடுமலை.
வாகன ஓட்டுனர்கள் அவதி
உடுமலை தளி ரோடு சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலையில் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். இதை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும்.- செல்வராஜ், உடுமலை.
நிழற்கூரை வேண்டும்
உடுமலை-பழநி ரோடு எஸ்.வி.புரத்தில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. எனவே அங்கு புதிதாக நிழற்கூரை அமைக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சாந்தி, உடுமலை.
தரைமட்டப்பாலம் சேதம்
தேசிய நெடுஞ்சாலையில், கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியிலுள்ள தரைமட்டப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமசாமி, உடுமலை.