வால்பாறை:வால்பாறையில் உள்ள வீடுகளில் குப்பையை தரம் பிரித்து சேகரிக்க, பக்கெட் வழங்காததால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறையை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குப்பையை வீடு தோறும் சேகரித்து, தரம்பிரிக்கும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.வால்பாறை நகரில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் நாள் தோறும் குப்பை சேகரிக்கப்பட்டு ஸ்டேன்மோர் சந்திப்பில் உள்ள, திறந்தவெளிக் குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது.
திடக்கழிவு மேலாண் மை திட்டத்தில் குப்பையை தரம் பிரித்து, துாய்மை பணியாளர்கள் பெற்று செல்கின்றனர். ஆனால், வீடுகளுக்கு நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பக்கெட் வழங்காததால், சிலர் குப்பையை தெருவில் வீசிச் செல்கின்றனர்.மக்கள் கூறியதாவது:வால்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிக்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டும், இதுவரை இந்த திட்டம் முழுமையடைய வில்லை. இதனால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிக்காக, துாய்மை பணியாளர்கள் குப்பையை வீடுகள் தோறும் தரம் பிரித்து பெற்று செல்கின்றனர். இதற்காக, வால்பாறை நகராட்சியில் பிளாஸ்டிக் பக்கெட் வழங்கவில்லை.அனைத்து வீடுகளுக்கும், மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரிக்கும் வகையில் நகராட்சி சார்பில், இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
தங்க காசு என்னாச்சு!
வால்பாறை நகரில், பொதுமக்களை அவரவர் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும். சிறப்பான முறையில் நாள் தோறும் குப்பையை தரம்பிரித்து வழங்கும், பத்து பேரை தேர்வு செய்து, சுதந்திர தின விழாவில் அவர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க காசு வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு, நகராட்சி அதிகாரிகள் அறிவித்தனர். ஆட்சி மாற்றத்திற்கு பின், அந்த அறிவிப்பு என்னாச்சு என்பது தெரியவில்லை.