சென்னையில் வீடு, கடை உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்போருக்கு, 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்க வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. திட்ட அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நேரடியாக புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதி வழங்குவதில், கவுன்சிலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு கீழ் கட்டப்படும் கட்டடங்களுக்கு, மாநகராட்சி அனுமதி அளிக்கிறது. அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அனுமதி அளிக்கிறது .கட்டடத்திற்கான வடிவமைப்பு, வரைபடம், திட்டம் உள்ளிட்டவை அடிப்படையில், கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டியும், விதிகளை மீறியும் பெரும்பாலான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடந்தையாக செயல்பட்டதால், விதிமீறல்கள் தொடர்ந்து அதிகரித்தன. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களை பயன்படுத்த முடியாதவாறு, அந்த கட்டடங்களின் கதவுகள், ஜன்னல்கள் அகற்ற உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியது.
அதிகாரம்
கட்டட அனுமதிக்கு மாறான கட்டடங்கள், திட்ட அனுமதி பெறாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, வார்டு உதவி அல்லது இளநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற்பொறியாளர்களுக்கு, மாநகராட்சி அதிகாரம் வழங்கி உள்ளது.அதன்படி, பொறியாளர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, திட்ட அனுமதி உள்ளதா, அனுமதிக்கு உட்பட்டு கட்டடம் கட்டப்படுகிறதா என்பதையும் சரிபார்த்து வருகின்றனர்.
திட்ட அனுமதி மீறி கட்டடம் கட்டப்பட்டிருந்தால், கட்டுமான நிலையிலேயே பணியை நிறுத்த, கட்டட உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்படுகிறது.சென்னையில் இதுவரை, 2,075 கட்டடங்களில் ஆய்வு செய்யப்பட்டு, விதிமீறிய, 467 கட்டடங்களுக்கான பணியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், கட்டுமான திட்ட அனுமதியில், கவுன்சிலர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வசூல்
சென்னை மாநகராட்சியில் புதிதாக பதவியேற்றுள்ள கவுன்சிலர்கள் சிலர், கட்டட உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனத்தினரை மட்டுமின்றி, அதிகாரிகளையும் மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. கட்டுமான திட்ட அனுமதி வழங்க, சதுர அடி கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, புதிதாக வீடு, கடைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி கோருபவர்கள், திட்ட விபரம், வரைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும்போது, அவற்றை பரிசீலித்து, 30 நாட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டுஉள்ளது. ஏதேனும் குறைபாடுகள், ஆட்சேபனை இருந்தால், நிராகரிப்புக்கான உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே போல், 30 நாட்களுக்குள் மண்டல அளவில் திட்ட அனுமதி கிடைக்காத பட்சத்தில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மேயர், துணை மேயர், கமிஷனர், துணை கமிஷனர்களிடம் நேரடியாக புகார் மனு அளிக்கலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.30 நாட்களில் நடவடிக்கை
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
விதிமீறல் கட்டடம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தப்படுகிறது. திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்பங்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரி, 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை மீறி, திட்ட அனுமதி குறித்த விண்ணப்பம் நிலுவையில் இருந்தால், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேரடியாக புகார் அளிக்கலாம். புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல்வாதிகள் தலையீடு இருந்தால், அது உரிய வகையில் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -