உடுமலை: விளைநிலங்களில், இருப்பு வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் டன் சின்னவெங்காயம் அழுகும் முன், ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தி, நஷ்டத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில், பெரம்பலுார், நாமக்கல், கிருஷ்ணகிரி, பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில், ஆண்டுக்கு எட்டு மாதங்களில் ஐந்து சீசன்களாக சின்னவெங்காயம் பயிரிடப்படுகிறது. வீரிய ரக விதை சாகுபடியில் ஏக்கருக்கு, அதிகபட்சமாக, 8 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது.
இதனால், மாநிலத்தின் தேவையை விட, ஒவ்வொரு சீசனிலும், உற்பத்தி பல மடங்கு கூடுதலாக உள்ளது.உள்நாட்டு தேவையை விட விளைச்சல், அதிகளவு இருந்ததால், மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் (நேபட்) சின்னவெங்காயத்தை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.