ஊட்டி : ''நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நீலகிரி தி.மு.க., கோட்டை; உங்களால் இந்த ஆட்சி அமைந்திருக்கிறது. மக்கள் தரும் வரவேற்பு எனக்கு பணி செய்ய ஊக்கமும், உற்சாகமும் தருகிறது. நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பி, எங்களுக்கு ஆட்சி அமைக்க வழி ஏற்படுத்தி நீங்கள் தந்தீர்கள். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.
கடந்த, 10 ஆண்டுகள் செய்ய வேண்டிய ஆட்சி பணிகளை, ஓரே ஆண்டில் செய்துள்ளோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில், 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீலகிரி மக்களை எப்போதும் சந்திப்பேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பழங்குடி மக்களுடன் நடனம்
ஊட்டி சேரிங்கிராஸ் மற்றும் தோடர்மந்து பகுதியில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தள்மந்து பகுதியில், வரவேற்பு அளித்த தோடர் பழங்குடி மக்களுடன் முதல்வர் பாரம்பரிய நடனமாடினார். பின், 'தமிழகம்' அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அவருடன், நீலகிரி எம்.பி., ராஜா, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தி.மு.க., மாவட்ட செயலாளர் முபாரக் உடனிருந்தனர்.