கோவை : ''வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய மையமாக கோவை உருவாக்கப்படும்,'' என்று நேற்று நடந்த தொழில் துறையினர் கலந்துரையாடல் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை; அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை என்ற பெயரை பெற்ற நகரம் இந்த கோவை. கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்கு, மேற்கு மண்டலத்தின் தொழில் முன்னேற்றத்திற்கு, கோவை விமான நிலையத்தின் விரிவாக்கம் அவசியம் தேவை. இதை உணர்ந்து, விமான நிலையத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துவதற்கான பணி, கருணாநிதி முதல்வராக இருந்தபோது தொடங்கி வைத்தார்.இந்தப் பணிகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டு, நில எடுப்புப் பணி 2010ல் தொடங்கப்பட்டன.
கடந்த ஆட்சிக் காலத்தில் தொய்வடைந்திருந்த அந்த பணி இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. 1,132 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணி விரைவில் முடிக்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக, மாநிலத்தின் தலைசிறந்த பன்னாட்டு விமான நிலையமாக கோவை விமான நிலையம் உயர்த்தப்படும்.
புதிய மாஸ்டர் பிளான்
கோவை நகரின் கட்டமைப்புத் தேவைகளுக்கான எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய வகையில், இந்தப் பகுதிக்கான புதிய மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும். தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இந்த அரசின் லட்சியத்தை அடைய, கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைய வேண்டும். தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய மையமாக கோவை உருவாக்கப்படும். இதற்காக தகுந்த ஆலோசகரை நியமித்து, விரிவான திட்டம் தயாரிக்கப்படும். இந்த விரிவான திட்டம், கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானுடன் ஒருங்கிணைக்கப்படும்.
கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஏற்றுமதி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட 10 ஏற்றுமதி மையங்களில் நான்கு மையங்கள் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
உள்நாடு மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் மற்றும் தென்னை நார் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை பிரபலப்படுத்தவும், மாநிலம் முழுவதும் கயிறுத் தொழில் குழுமங்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோவையில் அமைக்கப்படும். இதற்கு, முதற்கட்டமாக 5 கோடி ரூபாய் தொடக்க மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரத்தில் அரசு பங்களிப்பு 10 கோடி ரூபாயுடன், 16 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டாரத்தில் 5 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் 6 கோடியே 93 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும் ஒரு கயிறு குழும பொது வசதி மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின்னணு தொழில்
மின்னணு சாதனங்களின் பயன்பாட்டில் உலகம் முழுவதும் மூழ்கியுள்ளது. 'சிப்' என்று அழைக்கப்படும் செமி-கண்டக்டர் இல்லாத மைக்ரோ எலக்ட்ரானிக் சாதனமே இல்லை என்றே சொல்லலாம். முன்னணி நிறுவனங்கள், தங்கள் தேவைக்காக, சீனா, தைவான் போன்ற நாடுகளை நம்பியிருக்கும் சூழல் உள்ளது. இதை மனதில் கொண்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு நீங்கள் பணியாற்ற வேண்டும்.அதிக முதலீடுகளை மேற்கொண்டு, தயாரிப்புகளை பலப்படுத்துங்கள்; விரிவாக்கத்தை மேற்கொள்ளுங்கள், மதிப்புக் கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யுங்கள் என்பது முதலீட்டாளர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை. தமிழக பொருளாதாரம் பல்முனைப் பொருளாதாரமாக மாற வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு. உங்களது தொழில் முயற்சிகள் அனைத்திற்கும், அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் பேசுகையில், ''நுால் விலை உயர்வு மேற்கு மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பலர் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். கச்சா பொருள்களின் வரலாறு காணாத உயர்வால், பலர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உள்ளனர். இதன் தீவிரத்தை உணர்ந்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறேன்.'' தி.மு.க., எம்.பி., கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.,க்கள், டில்லி சென்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். தொழில் துறையினர் கவலைகளை விரைந்து தீர்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. கோவை வந்தவுடன், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயலை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்,'' என்றார்.