'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில், 2.55 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், சுகாதார பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, ஆக்சிஜன் அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், புதிதாக நோய் கண்டறியப்படுபவர்கள், அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நோய்களின் தன்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் ரத்த கொதிப்பு உள்ளவர்கள், ஒரு லட்சத்து, 8,454 பேர்; சக்கரை நோய் உள்ளவர்கள், 79 ஆயிரத்து, 877 பேர்; ரத்த கொதிப்பு மற்றும் சக்கரை நோய், 53 ஆயிரத்து, 594 பேர்; இயன்முறை சிகிச்சை உள்ளவர்கள், 7,769 பேர்; படுத்த படுக்கையாக உள்ள, 5,868 பேர்; 2 லட்சத்து, 55 ஆயிரத்து, 562 பேர் பயன்பெற்று வருகின்றனர்.
இப்பணிக்கு, 101 இடைநிலை சுகாதார பணியாளர்களும், 194 பெண் சுகாதார பணியாளர்களும், 25 தொற்றா நோய் செவிலியர்களும் என மொத்தம், 320 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 20 பேருக்கு மருந்து, மாத்திரை, இயன்முறை சிகிச்சை மற்றும் ஆதரவு சிகிச்சைகள் அளித்து வருகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.