கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைத்த பகுதிகளுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம், என்.கே., பில்டுகான் நிறுவனத்துடன் இணைந்து, புதிய பாதாள சாக்கடை அமைப்பது குறித்த திட்ட அறிக்கை தயார் செய்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் முருகேசன் முன்னிலை வகித்தார். தற்போதைய பாதாள சாக்கடை வசதி, நிலப்பரப்பின் தன்மை, திட்டக்கூறுகள் வடிவமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் கவுன்சிலர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள், தங்கள் கருத்துக்களை கூறினர்.
அதன்படி, 100 சதவீத பாதாள சாக்கடை வசதி அமைப்பை நிறைவேற்றுவது, குறியீட்டு வரைபடம் உருவாக்குவது, இடங்களை ஆய்வு செய்வது, கழிவுநீர் சுத்திகரிக்கப்பு நிலையங்களுக்கு செல்லும் பாதைகள், மக்கள்தொகை கணிப்புகள் மற்றும் கழிவுநீர் வெளியேற்றுதல், சுற்றுச்சூழல் மதிப்பீடு உள்ளிட்டவற்றுடன் புதிதாக பாதாள சாக்கடை அமைக்க, 45.77 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அதற்கான நுகர்வோர் கட்டணங்களும் முன்மொழியப்பட்டன.
பாதாள சாக்கடை அமைப்பது குறித்தும், அதன் வடிவமைப்பு குறித்தும் பங்களிப்பாளர்கள் விளக்கினர். நகராட்சி பொறியாளர் சரவணன், நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.