கல்விக்கடன் வழங்காததை
கண்டித்து வங்கி முற்றுகை
காரிமங்கலம், மே 20-
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இயங்குகிறது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கியில் கல்விக்கடன் பெற, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், வங்கியிலிருந்து எந்த பதிலும் வாரததால், தொடர்ந்து மாணவர்கள், வங்கிக்கு சென்று கல்விக்கடன் கேட்டுள்ளனர். ஆனால், அங்கு பணியாற்றும் வங்கி மேலாளர் மாணவர்களை அலைய விட்டுள்ளனர். இதனால், நேற்று மாணவர்களின் பெற்றோர் வங்கிக்குச் சென்று மேலாளரிடம் கேட்டபோது, பெற்றோர்களுக்கும், மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், வங்கியை பெற்றோர் முற்றுகையிட்டனர். தகவலின்படி வந்த காரிமங்கலம் போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.
வளம் மீட்பு பூங்காவில் அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி, மே 20-
பர்கூர் டவுன் பஞ்.,ல், வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இங்கு குப்பைகளை பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.
நேற்று தர்மபுரி மண்டல பேருராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக முறையாக பிரித்து -மக்கும் குப்பையை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கவும் மக்காத பொருட்களை மறுசுழற்சி செய்யவும் அறிவுரை வழங்கினர்.
பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரி, மே 20-
கிருஷ்ணகிரி அடுத்த எலத்தகிரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவியர் அமர்ந்து படிக்க டெஸ்க், பெஞ்சுகள் போதுமான அளவில் இல்லை என பள்ளி நிர்வாகத்தினர் கிருஷ்ணகிரி ஐ.வி.டி.பி.,
நிறுவனத்தை அணுகி கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று டெஸ்க், பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. ஐ.வி.டி.பி., நிறுவனத்தலைவர் குழந்தை பிரான்சிஸ், 3.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 50 டெஸ்க், பெஞ்ச் ஆகியவற்றை வழங்கி பேசினார்.
மூன்று மாரியம்மன்
கோவில்களில் திருட்டு
கிருஷ்ணகிரி, மே 20-
ஓசூர் அடுத்த அத்திமுகத்தில் மாரியம்மன், சல்லாபுரி மாரியம்மன், ஓம் சக்தி கோவில்கள் அருகருகே உள்ளன. நேற்று முன்தினம் மர்மநபர்கள் மாரியம்மன் கோவிலில் தாமிரத்தால் ஆன பிரபாவள்ளி, கலசம், வெள்ளி சூலம், தங்கத்தாலி, ஓம் சத்தி கோவிலில், 2 விளக்குகள், வெள்ளி தட்டு, சல்லாபுரி மாரியம்மன் கோவிலில்
உண்டியல் பணம் ஆகியவற்றை திருடினர். மேலும் அம்மன் சிலையை கோவில் வெளியே வீசி சென்றுள்ளனர்.
மாரியம்மன் கோவிலில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கலசத்தை திருட முயற்சித்தவர்கள் பொதுமக்கள் வந்தவுடன் தப்பினர். பின்
அக்கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த, 8ல்
கும்பாபிஷேகம் நடந்த நிலையில், கோவில் கலசம் திருடு போயுள்ளது. மூன்று கோவில்களிலும் திருடு போன பொருட்களின் மதிப்பு, 1.91 லட்சம் ரூபாய். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலை விரிவாக்க பணி
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி, மே 20--
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைகோட்டை முதல் சுகர் மில் வரை, 1.14 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க பணி நடக்கிறது. இதற்காக சாலையோரங்களில் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. இதை பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி ஆய்வு செய்தார்.
அப்போது, சாலை தடுப்பு பணிகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகவும், தடுப்பு சுவர்கள் கட்ட போடப்படும் கலவைகள் தரமற்று இருப்பதாகவும் கூறி, இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதுவரை பணிகள் செய்யக்கூடாது என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அப்பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த ஆய்வின்போது, உதவி கோட்ட பொறியாளர் சண்முகம், ஏ.இ., நேதாஜி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், நகர செயலாளர் தென்னரசு உடனிருந்தனர்.