செய்திகள் சில வரிகளில்... ஈரோடு
Added : மே 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

அருங்காட்சியகத்தில்
ஓவியம் வரைய பயிற்சி
ஈரோடு, மே 20-
அரசு அருங்காட்சியகத்தில் ஓவியம் வரைய பயிற்சி நடந்தது. ஈரோடு, வ.உ.சி., பூங்காவில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம் புகைப்பட கண்காட்சி துவங்கியது. வரும், 31ம் தேதி வரை கண்காட்சி தொடர்கிறது.
இதன் ஒரு பகுதியாக மாணவ, மாணவியருக்கு ஓவிய பயிற்சி வகுப்பு துவங்கியது. இன்று பயிற்சி வகுப்பு நிறைவு பெறுகிறது. இதில், 15 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஓவியர் ஷானவாஸ், பயிற்சி அளிக்கிறார். ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி செய்துள்ளார்.
38ம் ஆண்டு அமைப்பு தினம்;
சத்துணவு ஊழியர் உற்சாகம்
காங்கேயம்,மே 20--
சத்துணவு ஊழியர்கள் சங்க அமைப்பு தினம், காங்கயத்தில் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், 38ம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, காங்கேயம் ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் அருகில் ஒன்றிய பொருளாளர் மோகன் தலைமையில் கொடியேற்றப்பட்டு, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. காலமுறை ஊதியம், சட்டரீதியான குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டியை சமூக நலத்துறை மூலமாக வழங்க ஆவண செய்ய வேண்டும். மையங்களுக்கு எரிவாயுவை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள், 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இட ஒதுக்கீட்டில் சேர்க்கை; அவகாசம் நீட்டிப்பு
ஈரோடு, மே 20-
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 2022-23ம் கல்வி ஆண்டில், அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் சேர்க்கை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 106 மெட்ரிக் பள்ளிகள், ஒரு சுய நிதி பள்ளி, 85 துவக்க மற்றும் மழலையர் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீடு சேர்க்கைக்கு, நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் பலர் விண்ணப்பிக்க வாய்ப்பாக, வரும், 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
rte.tnschools.gov.in என்ற இணைய வழியிலும், ஈரோடு சி.இ.ஓ., அலுவலகம், டி.இ.ஓ., அலுவலகங்கள், 14 யூனியனில் உள்ள வட்டார கல்வி அலுவலகங்களில் பதிவு செய்யலாம். இத்தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன்
கோவிலில் தீ மிதித்த பக்தர்கள்
பெருந்துறை, மே 20-
சீதேவி அம்மன் கோவிலில், திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.
காஞ்சிக்கோவில், சீதேவி அம்மன் கோவில் தேர்விழாவை ஒட்டி, நேற்று அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை, 4:30 மணியளவில் தேர்த்திருவிழா நடக்கிறது. நாளை தேர் நிலை சேர்தல் மற்றும் அம்மன் திருவீதியுலா நடக்கிறது. 22ம் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவுக்கு வருகிறது.

நகராட்சி சாதாரண கூட்டம்
காங்கேயம், மே 20-
காங்கேயம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் வெங்கடேஷ்வரன், துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர். நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்வதற்கான மண்டல் வாரியாக நிர்ணயிக்கப்பட்ட மதிப்புத் தொகை உயர்வு உள்ளிட்ட, 71 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
போலீஸ் ஸ்டேஷன் முன் பகீர்
சத்தியமங்கலம், மே 20-
போலீஸ் ஸ்டேஷன் முன், தாயுடன் மகள் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
கடம்பூர் அருகே உள்ள எக்கத்துாரை சேர்ந்தவர் நீலா. இவரின் மகள் பிரேமா, 24; இவருக்கும் மோகன்ராஜ் என்பவருக்கும் திருமணம் ஆனது. ஆறு ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சத்தி மகளிர் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மீண்டும் கணவர் கொடுமை படுத்துவதாக கூறி தாய் நீலாவுடன் பிரேமா, சத்தி போலீஸ் ஸ்டேஷன் முன், உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு, நேற்று தற்கொலை முயற்சி செய்தனர். போலீசார் தண்ணீரை ஊற்றி பெட்ரோல் கேனை பறித்தனர். கணவர் சித்ரவதையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நாளை குரூப்-2 தேர்வு;
35,619 பேர் விண்ணப்பம்
ஈரோடு, மே 20-
நாளை நடக்கவுள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2----ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது: குரூப்-2, 2-ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு, நாளை காலை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 117 மையங்களில் தேர்வு நடக்கிறது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-2, 2-ஏ (நேர்முக தேர்வு பதவிகள் மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வெழுத, 35 ஆயிரத்து, 619 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு தேர்வு கூடத்தில், 400 தேர்வாளர்கள் தேர்வு எழுதுவர். தேர்வை கண்காணிக்க, 8 பறக்கும் படை அலுவலர்கள், 29 நடமாடும் குழு, 120 ஒளிப்பதிவாளர்கள், 234 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தடையற்ற மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
வரதம்பாளையம் பத்ரகாளியம்மன்
கோவிலில் குண்டம் விழா ஜோர்
சத்தியமங்கலம், மே 20-
சத்தியமங்கலம் அருகே வரதம்பாளையம், பத்ரகாளியம்மன் கோவிலில், குண்டம் விழா நேற்று நடந்தது. அம்மன் அழைப்பை தொடர்ந்து தலைமை பூசாரி சங்கர், முதலில் குண்டம் இறங்கினார். அதை தொடர்ந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவில் மாவிளக்கு பூஜையை தொடர்ந்து, வாணவேடிக்கையுடன் கம்பம் பிடுங்கப்பட்டு, பவானி ஆற்றில் விடப்பட்டது. இன்று காலை பத்ர காளியம்மனுக்கு சந்தன காப்பு, மாலையில் ஆராட்டு விழா நடக்கிறது. நாளை காலை மஞ்சள் நீராட்டம் நடக்கிறது. 26ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை ஆதினகாரர்கள் தங்கவேல், நாச்சிமுத்து அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
கொடுமுடியில் 15 மி.மீ., மழை
ஈரோடு, மே 20-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம், கொடுமுடியில் அதிகபட்சமாக, 15.2 மி.மீ மழை, தாளவாடியில், 8 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் வேறெங்கும் மழை பொழிவு இல்லை. எனினும் மாவட்டத்தில் மேகமூட்டம் காணப்பட்டதால், இரவில் இதமான சூழல் காணப்பட்டது.
தனியார் நர்சிங் கல்லுாரி
மாணவி விபரீத முடிவு
ஈரோடு, மே 20-
ஈரோட்டில், நர்சிங் கல்லுாரி முதலாமாண்டு மாணவி, தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு, சூரம்பட்டி வலசு, விவேகானந்தன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். நெசவு தொழில் செய்கிறார். இவரின் மூத்த மகள் சந்தியா, 19; தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சந்தியா துாங்க சென்றார். சிறிது நேரத்தில் சந்தியா துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், சந்தியாவை கீழே இறக்கி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயில்வே மருத்துவமனை
பெண் ஊழியர் மாயம்
ஈரோடு, மே 20-
பெருந்துறை, சானடோரியம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளாதேவி, 40; நான்கு ஆண்டுக்கு முன் கணவர் சிவகுமார் இறந்து விட்டார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஈரோடு ரயில்வே மருத்துவமனை நர்ஸ்களுக்கு, 17 ஆண்டாக உதவியாளராக மஞ்சுளாதேவி பணிபுரிந்து வருகிறார். கடந்த, 16ம் தேதி இரவு பணிக்கு சென்ற மஞ்சுளா, மறுநாள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாமியார் ருக்மணி, மருமகளை பல்வேறு இடங்களில் தேடினார். மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ரயில்வே மருத்துவமனையில் விபரம் கேட்டபோது, நான்கு நாட்கள் விடுப்பு எடுத்து சென்றது தெரிய வந்தது. ருக்மணி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
காங்., ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம், மே 20-
ராஜீவ் கொலை வழக்கில், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, சத்தியமங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், காங்., நகர தலைவர் சிவக்குமார் தலைமையில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உட்பட, 25 பேர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X