பா.ஜ.,வில் 100 பேர் ஐக்கியம்
ஓசூர்: சூளகிரி ஒன்றியம் குராக்கனப்பள்ளியிலுள்ள திம்மராய சுவாமி கோவிலில் நேற்று, முருகன், ஊர்க்கவுண்டர் மாரியப்பன், சுண்டகிரி கிருஷ்ணன் ஆகியோரது தலைமையில், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் முன்னிலையில், மாற்று கட்சிகளில் இருந்து விலகியவர்கள், பா.ஜ.,வில் இணைந்தனர். இதில், இரண்டு கிராமங்களிலிருந்தும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர். இதில், மாவட்ட பார்வையாளர் முருகன், மகளிரணி மாவட்ட செயலாளர் மஞ்சுளா, பிரசார பிரிவு கர்னுால் ஸ்ரீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொழிலாளி விபரீத முடிவு
கிருஷ்ணகிரி: தளி அடுத்த மதகொண்டபள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி நவீன்குமார், 30. இவரது மனைவி அருணா, 25. இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு, அருணா கோபித்து கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனமுடைந்த நவீன்குமார் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.
யானை கூட்டத்தால்
ராகி, தென்னை சேதம்
தேன்கனிக்கோட்டை அடுத்த லக்கசந்திரத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஷ். இவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் ராகி பயிர்களை யானைகளின் கூட்டம் சேதப்படுத்தியது.
அதேபோல், அதேபகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாஜலபதி என்பவரின் நிலத்தில் இருந்த, இரண்டு தென்னை மரங்கள் மற்றும் ஒரு ஏக்கர் ராகி பயிர்களை யானைகள் சேதப்படுத்தின.
இதுபற்றி தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஆவணம் செய்வதாக கூறினர்.
அரூரில் 9 மி.மீ., மழை
தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில், 9 மி.மீ., மழை பதிவானது. அதை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டியில், 6, பென்னாகரத்தில், 1 என மொத்தம், 16 மி.மீ., மழை பதிவானது. நேற்று காலை முதல் இரவு, 7:00 மணி வரை வானம் மழை மேகத்துடன் காணப்பட்டதுடன், விட்டு, விட்டு சாரல் மழை பெய்து
வந்தது. இதனால், மாவட்டத்தில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
மனைவி மாயம்; கணவர் புகார்
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அடுத்த பி.தண்டரகுண்டாவை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 31. அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் மனைவி ரோஜாவுடன் காரில் சென்றுள்ளார். ஓசூர், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில் காரை நிறுத்திவிட்டு பேக்கரியில் ஸ்வீட் வாங்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது ரோஜாவை காணவில்லை. அவர் புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பைக் மோதி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அடுத்த சென்னியம்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணுபையன், 62; கடந்த, 17ல் இரவு, 8:30 மணியளவில் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் பேரிகை - சூளகிரி சாலை, அத்திமுகம் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பைக் கவிழ்ந்தது. காயமடைந்த அவர் மீது, அந்த வழியாக ஹீரோ பேஷன் பைக்கில் வந்தவர் மோதியதில், சம்பவ இடத்திலேயே
பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.
மழை சேதம் கணக்கெடுப்பு
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த நொச்சிக்குட்டை கோவில் வனத்தை சேர்ந்த முருகன் என்பவரின் கூரை வீடு நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் இடிந்து விழுந்தது. இதேபோன்று பூதநத்தத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரம் விழுந்ததில், அருகிலுள்ள புவியரசு என்பவரின் வீடு சேதமானது. சேத மதிப்பு குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர்.
சாலை விபத்தில் டிரைவர் பலி
தர்மபுரி: தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர், 62. ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சி டிரைவர். இவர் நேற்று காலை, 11:00 மணிக்கு வெண்ணாம்பட்டியில் இருந்து தன் ஹோண்டா பைக்கில் தொப்பூர் சாலையில் சென்றார். அவ்வழியாக வந்த லாரி, சந்திரசேகரின் பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தொப்பூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.
த.வா.க., நிர்வாகி மீது வழக்கு
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டையில் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம், த.வா.க., சார்பாக, முள்ளிவாய்க்கால், 13ம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, த.வா.க., தலைவர் வேல்முருகனை வரவேற்று, 20 இடங்களில் அனுமதியின்றி வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, தர்மபுரி டவுன் போலீசார், த.வா.க., மாநில துணைத்தலைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: பேரறிவாளன் விடுதலையை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், கிழக்கு மாவட்ட காங்., கட்சியினர் வாயில் துணியை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம்
உள்பட பலர் பங்கேற்றனர்.