வரும், 25ல் நடப்பதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட பஞ்., துணை தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல், கடந்த, 2019ல் நடந்தது. மொத்தமுள்ள, 12 வார்டுகளில், அ.தி.மு.க., ஒன்பது, தி.மு.க., மூன்று இடங்களில் வெற்றி பெற்றன. இதனால், மாவட்ட பஞ்., தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த கண்ணதாசனும், துணைத்தலைவராக தானேஷ் முத்துகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த சட்டசபை தேர்தலில், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட தானேஷ் முத்துகுமார், மாவட்ட பஞ்., துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, காலியாக இருந்த, 8வது வார்டில், தி.மு.க.,வை சேர்ந்த கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால், தி.மு.க.,வின் பலம், நான்காக உயர்ந்தது. அ.தி.மு.க., பலம் எட்டாக குறைந்தது.
தொடர்ந்து, 2 கவுன்சிலர்கள் தி.மு.க.,வுக்கு மாறியதால், இரண்டு கட்சிகளில் தலா, 6 கவுன்சிலர்கள் சமபலத்தில் இருந்தனர். இதனால், இரண்டுமுறை துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.தொடர்ந்து, வரும், 25 பகல், 2:30 மணிக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட பஞ்., கவுன்சிலர் திருவிகா, வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேர்தல் ஒத்திவைப்பதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., மாவட்ட பஞ்., கவுன்சிலர் திருவிகா கூறியதாவது: இரண்டு கட்சிகளும் சமபலத்தில் இருப்பதால், எப்படியாவது முறைகேடாக தேர்தல் நடத்தி துணை தலைவர் பதிவியை கைப்பற்ற வேண்டும் என, தி.மு.க., திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், 25ல் தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் நடத்தும் அலுவலர் வாணிஈஸ்வரி கடிதம் அனுப்பியுள்ளார். கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, 25ல் உள்ளூர் விடுமுறை உட்பட பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில், 25ல் நடக்கும் தேர்தல் ஒத்திவைப்பதாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தி வேறு தேதி அறிவிப்பதாகவும், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.