நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில், ஹிந்து அறநிலையத்துறையின் கீழ், பிரம்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 15ல், அம்மாசிபாளையத்தை சேர்ந்த புதுமண தம்பதியர் வழிபாடு செய்வதற்காக கோவிலின் உள்ளே சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை' என, தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் சிறப்புரைஆற்றினார். கூட்டத்தில், கோவிலில் அனைத்து சமூக மக்களும் நுழைய, வழிபட பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுத்து நிறுத்திய நபர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, போலீசாரின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி சென்று கைது செய்தனர்.
இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் ரவி உள்பட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.