பா.ஜ., வக்கீல்கள் எதிர்ப்பால், தி.மு.க., பிரமுகரின் ஜாமின் மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி விசுவநாதன். இவரை, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் மாணிக்கம் என்பவர், அரசியல் மற்றும் நிலப்பிரச்னை முன்விரோதத்தில், விசுவநாதனையும், அவரது தாயாரையும் தாக்கினார். இதில், இருவரும் காயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாணிக்கம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும், முன்ஜாமின் கோரியும், நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், மாணிக்கம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது நேற்று (மே., 19ம் தேதி) விசாரணை நடக்க இருந்தைது. ஆனால், மாணிக்கத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என, பா.ஜ., வக்கீல்கள், 40 பேர், நீதிமன்ற வளாகத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பிரமுகர் மாணிக்கத்திற்கு, நீதிமன்றம் ஜாமின் வழங்குவதை ஒத்திவைத்தது. இதையடுத்து பா.ஜ., வக்கீல்கள் கலைந்து சென்றனர்.