மாவட்டத்துக்கு ஒரு தொழில் நகரம் அமைக்கணும்! முதல்வரிடம் தொழில் துறையினர் வலியுறுத்தல் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மாவட்டத்துக்கு ஒரு தொழில் நகரம் அமைக்கணும்! முதல்வரிடம் தொழில் துறையினர் வலியுறுத்தல்
Added : மே 20, 2022 | |
Advertisement
 


கோவையில் முதல்வர் ஸ்டாலின், தொழில் துறையினர் இடையே கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த தொழில்துறையினர், தொழில்முனைவோர் பங்கேற்றனர்.தொழில் துறையினர் தங்கள் கோரிக்கைகள் குறித்து கூறியதாவது:

உற்பத்தி சார்ந்த ஊக்க சலுகை!

இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்: உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. ஒரு தொழில் நிறுவனம், விரிவாக்கம் செய்வதற்கு கூடுதலாக செய்யும் முதலீட்டுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்; வேலைவாய்ப்பும் உருவாகும்.இந்த முயற்சி வெற்றி பெற்றால், 15 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி, 3 லட்சம் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்த முடியும். வியாபாரம் செய்வதை சுலபமாக்குதல் என்ற கருத்தில், மாவட்டங்களை தர வரிசைப்படுத்த வேண்டும். இதன் மூலம் மாவட்டங்களுக்குள் போட்டி அதிகரிக்கும்; நல்லது நடக்கும்.

மாவட்டத்துக்கு ஒரு தொழில் நகரம்!
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம்: யூக பேர வணிகத்தில் பஞ்சு வியாபாரம் சிக்கியிருப்பதற்கு தீர்வு காண, எம்.சி.எக்ஸ்., பொருள் வணிக சந்தையில் இருந்து பஞ்சை நீக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.ஒட்டு மொத்த இந்திய ஏற்றுமதியில் திருப்பூர் பின்னலாடை துறை மட்டுமே 1.07 சதவீதம் ஏற்றுமதி செய்கிறது. தமிழகத்தில் இருக்கும், 38 மாவட்டங்களிலும் திருப்பூர் போன்ற ஒரு தொழில் நகரம் அமைக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ற வகையில், ஒரு தொழில் தொடர்பான 'கிளஸ்டர்' உருவாக்கப்பட வேண்டும்.

புதிய நம்பிக்கை!
இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது: பஞ்சு, நுால் பிரச்னைக்கு தீர்வு காண முதல்வர் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் முதல்வர் உத்தரவுபடி கொங்கு மண்டல எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயலை சந்தித்து பேசினர். நுால், பஞ்சு பிரச்னையை உணர்ந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய ஜவுளித்துறை அமைச்சர், போன் மூலம் முதல்வருடன் பேசியுள்ளார். இதன் மூலம் நுால், பஞ்சு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

கட்டமைப்பு மேம்பாடு
பண்ணாரிஅம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம்: கோவை சத்தி சாலையில் கணபதி முதல் புரோஜோன் மால் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்.கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை நீலம்பூர் வரை நீட்டிக்க வேண்டும். அவிநாசி சாலை உப்பிலிபாளையம் பழைய மேம்பாலத்திலிருந்து மில் சாலையை விரிவாக்கம் செய்வது அவசியம். கோவை - துபாய் விமான சேவை, 'சிறுதுளி' சார்பில் கோவையில், 800 மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், 2,000 மழைநீர் சேகரிப்பு அமைப்பை புதியதாக கோவையில் நிறுவினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மக்களின் தண்ணீர் தேவை நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது.

சிறுவாணி துார் வாரணும்!
சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன்: சிறுவாணி அணையின் அடிமட்டத்தில் சேறும், சகதியும் நிறைந்துள்ளது. அணையின் பெரும்பகுதி சேறாக இருப்பதால் மழைக்காலத்தில் விரைவாக அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. அணையை துார் வாரினால் அணையில் தண்ணீர் இருப்பு அதிகரிக்கும். மாநகராட்சி பகுதியில் இரண்டு கழிவுநீர் பண்ணை மட்டுமே உள்ளது. இதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மூன்று பாலம் கட்டுமானங்கள் நடைபெறுகிறது. இரண்டு பாலப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவாக பணி நிறைவு செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல் குறைய வேண்டும்.

இரட்டிப்பு மகிழ்ச்சி
தென்னிந்திய மில்கள் சங்க தலைவர் ரவிசாம்: பருத்தியை யூகபேர வணிகத்தில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு தடைவிதிப்பது குறித்து முதல்வர் மத்திய அரசுடன் பேசியிருக்கிறார். அதற்கான அறிவிப்பு விரைவாக வெளியாகும் என்று நம்புகிறோம். பருத்திக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்கும் முயற்சியில் இறங்குவதாக முதல்வர் நம்பிக்கையுடன் பேசியது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. செம்மொழிப்பூங்கா அமைப்பது, வெளிநாடு விமானசேவைகளை விரிவாக்கம் செய்வது குறித்து முதல்வருடன் பேசியிருக்கிறோம்.

ஒற்றைச் சாளர முறை
கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு: மூலப்பொருட்களின் விலையை குறைக்க கமிட்டி ஏற்படுத்துதல், கோவைக்கு திருத்தப்பட்ட மாஸ்டர்பிளான் வெளியீடு, உள்ளூர்திட்டக்குழுமத்தில் கட்டட வரைபட அனுமதிக்கு ஒற்றைச்சாளர முறையை நடைமுறைப்படுத்துதல், மின்னணு சாதன உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்குதல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மத்திய அரசுக்கு அழுத்தம்
அகில இந்திய ஜவுளிக்கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார்: ஜவுளித்துறையில் நீடிக்கும் பிரச்னைகளை களைய முதல்வர்; மத்திய அமைச்சர்களை சந்திக்க எம்.பி.,க்களை அனுப்பி தொடர்ந்து பேசியதன் பயனாகத்தான் பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு காட்டன் கார்பரேஷன் பருத்தியை கொள்முதல் செய்து பயனாளிகளுக்கு வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. இறக்குமதியாகும் பருத்தி விரைவாக தமிழகத்துக்கு வந்து சேருவதற்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துவது வரவேற்புக்குரியது.

சான்றளிப்பு மையம்
சீமா (தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம்) தலைவர் கார்த்திக்: சர்வதேச அளவில் ஒரு சதவீத அளவுக்கு நம் நாடு பம்ப் உற்பத்தி செய்கிறது. நாம் தயாரிக்கும் பம்ப்களுக்கு சீனா சான்றளிக்கும் நிலை உள்ளது. சி.பி.,சர்டிபிகேசன் வழங்குவதை கோவையில் அமைக்க வேண்டும். அதற்கான வசதிகள் கோவை சிட்டார்க் சோதனை மையத்தில் உள்ளது. அதை விரிவாக்கம் செய்வதற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்.

ரயில்வே தனி அமைச்சகம்
இந்திய தொழில் வர்த்தகசபை கோவை தலைவர் பாலசுப்ரமணியன்: உக்கடம் -ஆத்துப்பாலம் மேம்பாலத்தை போத்தனுார் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். லாலிசாலையில் மேம்பாலம், கரூர் - கோவை பசுமைச்சாலையை கோவை கிழக்கு புறவழிசாலையை இணைக்க வேண்டும். கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே, 18 கி.மீ., நான்கு வழி குகைச்சாலை அமைக்க வேண்டும். ரயில்வே துறையை மேம்படுத்த மாநிலஅமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். சேலம்ரயில்வே கோட்டத்திலிருந்து கோவையை தனியாக பிரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

குறுந்தொழில் வங்கி
கோயமுத்துார் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்க தலைவர் சிவக்குமார்: விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி இருப்பதை போல், சிறு, குறு தொழில் முனைவோருக்கு குறுந்தொழில் வளர்ச்சி வங்கி அமைக்க வேண்டும். வங்கிக்கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும். சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.

வட்டி தள்ளுபடி
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கம்(டேக்ட்) தலைவர் ஜேம்ஸ்: குறுந்தொழில் முனைவோருக்கென்று தனி தொழில் பேட்டை, 'தாய்கோ' வங்கி மூலம் கடனுதவி, 2017 ஜூலை முதல் 2021 மார்ச் வரை காலதாமதமாக செலுத்திய தொகைக்கு அபராத வட்டி தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.


-நமது நிருபர் குழு-

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X