பெரம்பலுார்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன், 41. இவர், பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சினிமா நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தமிழகம் முழுதும் உள்ள நுாற்றுக்கணக்கான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இப்படம் பெரம்பலுாரில் இரண்டு தியேட்டரில் வெளியானது.
இந்த படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, பெரம்பலுார், அரியலுார், திருச்சி உட்பட தமிழகம் முழுதும் உதயநிதி ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர், இளைஞர் அணியினர், தி.மு.க.வினர் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக, நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, கதிரவன், பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கையை நீட்டி மேடையில் மைக் முன் பேசியவாறும், போலீஸ் சீருடையில் உதயநிதி இருக்கும் போட்டோக்களுடன் டிஜிட்டல் விளம்பர பேனரை வைத்தார்.
தகவலறிந்த, பெரம்பலுார் போலீசார் இந்த விளம்பர பேனரை அந்த இடத்தில் இருந்து அகற்றினர். இது குறித்து, விசாரித்ததில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து கதிரவன் தனது சொந்த செலவில் டிஜிட்டல் பேனர் வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ஏட்டு கதிரவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பெரம்பலுார் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.