கோவை:கோவை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் உலக தேனீக்கள் தினம், கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை வகித்தார். கலெக்டர் சமீரன் பேசியதாவது:தேனீ வளர்க்கும் விவசாயிகள், தங்கள் குறைகளை எந்த நேரமும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், அரசு திட்டங்களையும் கேட்டுப் பெறலாம்.
மாவட்டத்தில் தற்போது தேனீ வளர்ப்போர் எண்ணிக்கை 300 என்ற அளவில் உள்ளது. இன்னும் அதிக விவசாயிகள், இந்த தொழிலில் ஈடுபட வேண்டும். விவசாயிகள் அதிகம் பேர் இந்த தொழிலில் ஈடுபடும் பட்சத்தில், தேவையான பெட்டிகள், கருவிகளை வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கும் நிலை இருக்காது.தொழில் முனைவோர் மிகுந்த கோவை மாவட்டத்திலேயே, தேனீ பெட்டிகள், கருவிகள் போன்றவை தயார் செய்யப்படும் நிலை வந்துவிடும். தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை மேற்கொள்வதால், பயிர் மகசூல் அதிகரிக்கும் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், தேனீ வளர்ப்பு தொடர்பான கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் பெரியசாமி, தேனீ வளர்ப்போர் விவசாயிகள் சங்க நிர்வாகி விவேக், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி, வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி, துணை இயக்குனர்கள் தமிழ்செல்வி, பெருமாள்சாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.