சுற்றுச்சூழலில் தேனீக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. உலக பூக்கும் தாவரங்களில் 75 சதவீதம், தேனீ, பட்டாம்பூச்சி போன்றவைகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. குறிப்பாக, உணவு தானிய பயிர்களில் 35 சதவீதம் தேனீக்களால்தான், அயல்மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
தேனீ வளர்ப்பு தொடர்பாக கோவை, வேளாண் பல்கலை பூச்சியியல் துறை பேராசிரியர் சீனிவாசனை சந்தித்து பேசினோம். இதோ அள்ளி வீசுகிறார் தகவல்களை!காடு அழிப்பு, பூச்சிக்கொல்லி, ரசாயன பயன்பாடு, புவி வெப்பமயமாதல், வாழிடம் பறிபோதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், தேனீ இனம் அழிந்து வருகிறது. உலகிலுள்ள அனைத்து வகை தேனீக்களும் இந்தியாவில் உள்ளன. மலைத்தேனீ, கொம்புத் தேனீ, இந்தியத் தேனீ ஆகியவை இந்தியாவில் மட்டுமே காணப்படும் இனம். இத்தாலிய தேனீ, கொசுத்தேனீ ஆகியவையும் இங்குள்ளன.
இந்தியத் தேனீ
இந்தியத் தேனீக்கள் எல்லாவித சூழலுக்கும் தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடையவை. ஒரு தேனீக் குடும்பம் அல்லது ஒரு பெட்டி தேனீக்களிடம் இருந்து ஆண்டுக்கு 10 கிலோ தேன் எடுக்கலாம். தென்னிந்தியா, ஒடிசா, வடகிழக்கு மாநிலங்களில், இந்திய வகை தேனீக்களையே அதிகம் வளர்க்கின்றனர்.
இத்தாலிய தேனீ
இத்தாலிய வகை தேனீக்கள் அதிகம் தேன் கிடைக்கும் இடங்களுக்கு உகந்தவை. வணிக ரீதியான வளர்ப்புக்கு ஏற்றவை. வட இந்தியாவில் அதிகம் வளர்க்கின்றனர். நிறைய பூக்கள், தேன் கிடைக்கும் இடங்களில், ஒரு தேனீ குடும்பத்திடம் இருந்து, 25 முதல் 50 கிலோ தேன் எடுக்கலாம்.தமிழகத்திலும் இந்த வகையை வளர்க்கின்றனர். ரப்பர், முருங்கை, சூரியகாந்தி, மா உள்ளிட்ட அதிகம் தேன் கிடைக்கும் தாவரங்கள் இருக்குமிடங்களில், இத்தாலிய தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன.
வருவாய்க்கு உத்தரவாதம்
தேனீ வளர்ப்பால், தேன், தேன் மெழுகு, மகரந்தம், ராயல்ஜெல்லி, தேனீ பிசின், தேனீ விஷம் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கின்றன. தேனீக்களின் விஷம் மருத்துவத்தில் பயன்படுகிறது.100 பெட்டி இந்தியத் தேனீ வளர்த்தால், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும். தேன் விற்பனை தவிர, தேனீக்களையும் விற்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மே 20 உலக தேனீக்கள் தினம்!
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவைச் சேர்ந்த ஆன்டன் ஜேன்சா, நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாக அறியப்படுகிறார். அவரின் பிறந்தநாளான 1734, மே 20ம் தேதி, உலக தேனீ தினமாக ஐ.நா.வால் கடந்த 2017 முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலையில், மாதம் தோறும் 6ம் தேதி, தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது; கட்டணம் 590 ரூபாய். கடந்த 1913ம் ஆண்டு முதல் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பதிவு செய்ய, பல்கலைக்கழக பூச்சியியல் துறையை அணுகலாம்.