திருக்கழுக்குன்றம், தமிழக அரசுத் துறைகளில், நில அளவை துறை குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் நிலம் தொடர்பான புலப்படம், பட்டா சிட்டா, வரைபடம், நில வகைப்பாடுகள் உள்ளிட்ட ஆவணங்கள், பதிவேடுகளை இத்துறை நிர்வகித்து பராமரிக்கிறது.அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு தாலுகாக்களில் நில அளவை துறை அலுவலகம் இயங்குகிறது.இங்கு, வட்ட துணை ஆய்வாளர், முதுநிலை வரைவாளர், தாலுகாவிற்கு உட்பட்ட ஒவ்வொரு குறுவட்டத்திற்கும், ஒரு நில அளவையாளர் ஆகியோர் பணிபுரிகின்றனர்.ஒரே புல எண்ணில் அமைந்துள்ள நிலம், அவசிய சூழலில், பகுதியாக பிரிக்கப்படும். இவ்வாறு பிரிக்கும்போது, அளவை துறையினர், 'சப் டிவிஷன்' என குறிப்பிட்டு, உட்பிரிவு அளவை மேற்கொள்வர்.புல எண் உட்பிரிவிற்காக, விண்ணப்பம் பெறப்பட்டால், அப்பகுதி குறுவட்ட நில அளவையாளர், நேரடியாக கள ஆய்வு செய்து அளவிட்டு, நான்கு புற எல்லைகளுடன் உட்பிரிவை வகைப்படுத்துவார்; இணையத்திலும் பதிவேற்றுவர்.ஒவ்வொரு உட்பிரிவு நடைமுறைக்கும், கோப்பு உருவாக்கி, உட்பிரிவு எண்ணில் பட்டா வழங்க, தாசில்தாரிடம் பரிந்துரைப்பர்.விண்ணப்பதாரர், இணையவழியில் விண்ணப்பித்து, 30 நாட்களுக்குள், உட்பிரிவு நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும் என்பது அரசின் விதிமுறை.நிர்வாக, ஆவண குளறுபடிகள் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களால், குறிப்பிட்ட நாட்களுக்குள் நிலம் அளவிட்டு, கோப்பு உருவாக்க இயலாமல் தாமதமாகிறது.மாநிலம் முழுதும், லட்சக்கணக்கான விண்ணப்பங்களுக்கு, உட்பிரிவு தீர்வு காணப்படாமல் கிடப்பில் உள்ளது.எனவே, உட்பிரிவு நடைமுறையை தீவிரப்படுத்த முடிவெடுத்த வருவாய் துறை, கிராம நிர்வாக அலுவலர்களை, நில அளவையில் ஈடுபடுத்த, 2020ல் வழிவகை ஏற்படுத்தியது.இதை எதிர்த்து, நில அளவை அலுவலர்கள் சங்கம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணை முடிவில், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இவர்கள், நில ஆவண பராமரிப்பு நடைமுறைகள் குறித்து, முன்பே பயிற்சி பெற்றுள்ளனர்.நில அளவை, உட்பிரிவு நடைமுறைகள் உள்ளிட்ட புத்தாக்க பயிற்சிகளை, நில அளவை துறையினர், அவர்களுக்கு அளித்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுகாவில், 29, மதுராந்தகத்தில், 52, திருக்கழுக்குன்றத்தில், 46, செய்யூரில், 44, திருப்போரூரில், 30, வண்டலுாரில், 18. தாம்பரத்தில், 14, பல்லாவரத்தில், 6 என, மொத்தம் 239 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இப்பயிற்சி அளிக்க, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.அந்தந்த தாலுகா பகுதிகளில், கடந்த 14ம் தேதி துவக்கப்பட்ட பயிற்சி, இன்று நிறைவடைகிறது.இரண்டு நாட்கள், களத்தில் உட்பிரிவு நடைமுறை பயிற்சி; இரண்டு நாட்கள் உட்பிரிவு ஆவண கோப்பு உருவாக்கம் மற்றும் புலப்பகுதி சரிபார்ப்பு; இரண்டு நாட்கள், உட்பிரிவு ஆவணங்கள் இணைய பதிவேற்றம்; ஒரு நாள், தாலுகா, கிராம '8ஏ' பிரிவு மாற்றங்கள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.46 பேருக்கு பயிற்சி
திருக்கழுக்குன்றம் தாலுகாவில், 46 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, நில அளவை உட்பிரிவு நடைமுறை தொடர்பாக, ஒரு வார புத்தாக்க பயிற்சியளிக்க, எங்கள் துறைக்கு உத்தரவிடப்பட்டது. நான், சார்பு ஆய்வாளர்கள் சிவா, கதிரவன், முதுநிலை வரைவாளர் எழிலரசி பயிற்சி அளித்தோம்.எஸ்.பெருமாள்,நில அளவை, வட்ட துணை ஆய்வாளர், திருக்கழுக்குன்றம்