சென்னை, :'டிவி' கோளாறு விவகாரத்தில், வாடிக்கையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.செங்கல்பட்டு, காழிப்பட்டூரை சேர்ந்தவர் சுமதி முனீந்திரன், 45. இவர், தி.நகரில் உள்ள தனியார் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், 1.06 லட்சம் ரூபாய் செலுத்தி 'சோனி' 40 அங்குல 'எல்.சி.டி., டிவி' வாங்கினார்.ஐந்தாண்டுகளுக்கு பின், படம் தெளிவாக தெரியவில்லை. சேவை மையத்தின் மூலம், 'பேனல்' மாற்றப்பட்டது. இதற்கு 21 ஆயிரத்து, 630 ரூபாய் செலவானது. அப்போதும், படம் தெளிவாக தெரியவில்லை.இது குறித்து விசாரிக்கையில், 'அந்த மாடல் 'டிவி'க்கான பேனல் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. புதிய பேனல் பொருந்தாது' என, அலட்சியமான பதில் வந்தது.இதையடுத்து, சுமதி முனீந்திரன் இழப்பீடு கோரி, சென்னை மாவட்ட தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு, 2015ம் ஆண்டில் இருந்து நடந்து வந்தது. இந்த வழக்கில், நீதிபதி ஜிஜா, நீதித்துறை உறுப்பினர் சிவகுமார் பிறப்பித்த உத்தரவில், 'நிறுவனங்களின் சேவையில் குறைபாடு உள்ளது. வாடிக்கையாளர் மன உளைச்சலுக்கு ஆளானதால், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், வழக்கு செலவு 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.