சென்னை :'கழிவு மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுஉள்ளது.சென்னை புறநகர் பகுதிகளில், குப்பை கழிவுகளை அகற்றுவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.கட்டட அனுமதி வழங்கும்போதே, கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என, நகர ஊரமைப்பு இயக்ககத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை புறநகர் பகுதிகளில், நெடுஞ்சாலைகள், தாழம்பூர் ஏரி போன்ற நீர்நிலைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, 2021-ல் நாளிதழ்களில் செய்தி வெளியானது.
நகரமயமாக்கல்
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தீர்ப்பாயம், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட, சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த, பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:தாழம்பூர் கிராமம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. எனவே, ஊராட்சி ஒன்றியம் உதவியுடன், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.நகரமயமாக்கலால் இங்குள்ள கிராமங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், குப்பை கழிவுகளை அகற்றுதல், கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் வெளியேற்றுதல் பெரும் பிரச்னையாக உருவெடுத்து உள்ளது.டி.டி.சி.பி., எனும் நகர ஊரமைப்பு இயக்ககம் கட்டட அனுமதி வழங்கும்போதே, கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்.இந்த சிக்கலுக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, டி.டி.சி.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கமே, குப்பை கழிவுகளை கொட்டுவற்கான இடத்தை கண்டறிந்து பிரச்னைக்கு தீர்வு காண உதவ வேண்டும்.
தீர்வு
இதற்கு, செங்கல்பட்டு கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். புதிதாக உருவாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, முன்மாதிரியாக இருக்கும் வகையில், குப்பை கழிவுகள் அகற்றும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 25-ல் நடைபெறும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.