கூடலுார்;கூடலுாரில் பல ஆண்டுகளாக தொடரும், நிலப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுாரில், நிலம்பூர் கோவில் வசம் இருந்த, 80.88 ஆயிரம் ஏக்கர் ஜென்ம நிலங்களை, 'ஜென்மம் ஒழிப்பு சட்டம் 1969' மூலம், அரசு கையகப்படுத்தியது.கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், இதுவரை, 52 ஆயிரம் ஏக்கர் நில பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள, 36 ஆயிரம் ஏக்கர் செக் ஷன்-17 நிலங்களில், பெரிய எஸ்டேட்டுகளை தவிர,16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் ஏழை மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலம் பிரச்னை தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்டில் நிலுவையில் உள்ளது.இப்பகுதிகளில் உள்ள வீடுகளில், கோர்ட் உத்தரவுபடி, அடிப்படை வசதிகள் செய்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், பல ஆண்டுகளாக, பெரும்பாலான மக்கள் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி வசித்து வருகின்றனர். இந்நிலையில், 'கூடலுார் நிலப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என, தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ளது. அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''செக் ஷன்-17 நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு, வழக்குகளைக் காரணம் காட்டி மின்னிணைப்பு வழங்காமல் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், முதியவர்கள், நோயாளிகள் பராமரிப்பிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல் வாக்குறுதிப்படி, இப்பகுதி மக்களின், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேணடும்,'' என்றார்.