கால்வாய் கரை பாதையை மேம்படுத்தணும்!கிராம மக்கள் எதிர்பார்ப்பு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கால்வாய் கரை பாதையை மேம்படுத்தணும்!கிராம மக்கள் எதிர்பார்ப்பு
Added : மே 21, 2022 | |
Advertisement
 

உடுமலை:உடுமலை அருகே கால்வாய் கரையில், அமைக்கப்பட்ட ரோடு, மாற்றுப்பாதையாக பயன்படுவதால், திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என பல கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை நகர எல்லையில், பி.ஏ.பி., கால்வாய் செல்கிறது. பள்ளபாளையம், போடிபட்டி, குரல்குட்டை, கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம் ஆகிய கிராமங்களின் அருகிலும், நகர எல்லையை, ஒட்டியும் இந்த வாய்க்கால் செல்கிறது. இக்கால்வாய் கரையில், பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணிகளுக்காக மண் பாதை உள்ளது.


அருகிலுள்ள கிராம மக்கள், இப்பாதையை உடுமலை நகருக்குள் வராமல், பழநி ரோடு உட்பட பகுதிகளுக்கு செல்ல மாற்றுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.அரசு கலைக்கல்லுாரி உட்பட நகரின் எல்லையில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் செல்லவும் இந்த பாதை பயன்படுகிறது.இந்நிலையில், மண் பாதை மழைக்காலங்களில், பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறுகிறது. அப்போது, அவ்வழியாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் பள்ளங்கள், நிரந்தரமாகி விடுகிறது.இதனால், சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. பல கிராம மக்களின் தேவைக்காகவும், பொதுப்பணித்துறை மற்றும் பாசன சபையினர் கண்காணிப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ளவும், கால்வாய் கரையிலுள்ள பாதையை தார்ரோடாக மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இதன்படி, உடுமலை எஸ்.வி., மில் பகுதியில், கால்வாய் கரையில், குறிப்பிட்ட துாரம் தார் ரோடு அமைக்கப்பட்டது. பின்னர், அரசு கலைக்கல்லுாரி முதல், உடுமலை கால்வாய், 13 வது கி.மீ., லிருந்து, 16 வது கி.மீ., வரை, தார்ரோடு அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த பாதையை பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதே போல், பிற பகுதிகளிலும், கால்வாய் கரையில், ரோடு அமைப்பது மிகுந்த பயனளிக்கும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அரசு கலைக்கல்லுாரி முதல் பள்ளபாளையம் வரை இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X