உடுமலை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஸ் ஸ்டாண்ட் எதிரில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் உடுமலை ஒன்றிய கிளைத்தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். குடிமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்டச்செயலாளர் ரங்கராஜ், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிகளில், பணியாற்றும் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், குடிநீர் பணியாளர்களுக்கு, 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். துாய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து, சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். முன்களப்பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா கால ஊக்கத்தொகை, 15 ஆயிரம் ரூபாயை, ஊராட்சி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் துாய்மைப்பணியாளர்களுக்கு, பணிக்கொடை, ஓய்வூதியம் தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சி.ஐ.டி.யு., கட்டுமான சங்க நிர்வாகி கனகராஜ், மோட்டார் சங்க நிர்வாகி சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.