உடுமலை:காசநோயாளிகளை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, ஊட்டச்சத்து உணவு வழங்குவது குறித்து விரைவில் சுகாதாரத்துறை புதிய திட்டம் வகுக்க உள்ளது.தற்போது, மக்களை பாதிக்கும் நோய்களில் ஒன்றாக காசநோய் இருந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.நாட்டில், ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு, இரண்டு பேர், ஒரு நாளைக்கு, 1,150, என ஆண்டுக்கு, 4.2 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது மத்திய சுகாதாரத்துறை புள்ளிவிபரம்.
தலைமுடி, நகம், பல் தவிர உடம்பின் அனைத்து பாகங்களையும் தாக்கக்கூடியது காசநோய்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மாவட்ட அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வருகிறது.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் காசநோய் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளதால், நோயை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க தேவையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, காசநோயாளிகளை தத்தெடுக்கும் புதிய திட்டம், திருப்பூர் மாவட்டத்திலும் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:காசநோய்க்கு, சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால், முற்றிலும் குணப்படுத்த முடியும்.
'2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியா'வை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, காசநோயாளிகளை தத்தெடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, குறைந்தபட்சம் ஓராண்டுக்கு தேவையான மருத்துவ வசதி செய்து தரப்பட உள்ளது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், தனி நபர்களுடன் இணைந்து காசநோயாளியை தத்தெடுக்க வழிமுறை வகுக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.