திருபுவனை:திருவாண்டார்கோயில் அருகே சாலையோரம் இருந்த புளியமரம் விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். காரில் சென்ற நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவாண்டார்கோயிலில் இருந்து கொத்தபுரிநத்தம் மற்றும் திருபுவனை மின்னணு தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலையில், தனியார் கம்பெனி அருகே ஆபத்தான வளைவு உள்ளது.இங்கு சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் பழமையான புளியமரம், நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென சாலையின் குறுக்கே விழுந்தது.
அப்போது, திருவாண்டார்கோயிலில் இருந்து , கொத்தபுரிநத்தத்தை சேர்ந்த ராஜாராம் மகன் ஆனந்தராஜி (29), மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் அவ்வழியாக சென்றார். இந்த கார் மீது புளியமர கிளை விழுந்தது. இதில் காரில் சென்ற 4 பேரும் லேசான காயத்துடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.அதேநேரம், மோட்டார் சைக்கிளில் சன்னியாசிக்குப்பத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வாலிபர் தலையில் பலத்த காயம் அடைந்தார். காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.விசாரணையில் அவர், செஞ்சி அருகே உள்ள அத்தியூர் திருக்கை கிராமத்தை சேர்ந்த கொத்தனார் சரத்குமார் (28), புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரில் உளள மாமியார் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பியது தெரியவந்தது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.புளியமரம் விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. திருபுவனை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றிய பிறகு, போக்குவரத்தை சீரானது.