புதுச்சேரி:புதுச்சேரியில் இருந்து ஏற்றுமதியை பெருக்க அதிக வாய்ப்பு உள்ளது என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இணை டைரக்டர் ஜெனரல் உன்னிக்கிருஷ்ணன் கூறினார்.
தட்டாஞ்சாவடியில் நடந்த, ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடலில், அவர் பேசியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் ஏற்றுமதி தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. 2021-22ம் ஆண்டில் 443 அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகமாகும்.
புதுச்சேரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பார்மாசூட்டிக்கல், நியூக்ளியர் ரீயாக்டர், எலக்ட்ரிக்கல் மெஷினரி, இரும்பு, ஆட்டோ மொபைல், ஆர்கானிக் கெமிக்கல் உள்பட 10 தொழில்கள் ஏற்றுமதியில் 90 சதவீத பங்களிப்பு செய்து வருகின்றன.
இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு புதுச்சேரியில் இருந்து ஏற்றுமதியை பெருக்க அதிக வாய்ப்பு உள்ளது.குறிப்பாக புதுச்சேரியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள், மருந்துகள், பொறியியல் - ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள், ரசாயனங்கள் போன்றவற்றில் ஏற்றுமதி வளர அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.