ராமநாதபுரம்: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அழிந்துவரும் 50 நாட்டுப்புற கிராமிய கலைகளை மீட்டெடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கலை பண்பாட்டு மைய மதுரை மண்டல உதவி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் ஜவஹர் சிறுவர் மன்றம் மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இலவச ஓவிய பயிற்சி முகாமை துவக்கி வைத்த பின் அவர் கூறியது:தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவில் நாட்டுப்புற கலைஞர்களை(செவ்வியல் கலைகள்) கவுரவிக்கும் வகையில் கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது.இவர்களுக்கு பாராட்டு சான்று, பொன்னாடை மற்றும் முறையே ரூ.4000, 6000, 10,000, 15000, 20,000 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
ஏற்கனவே ஒவ்வொரு விருதும் தலா ஒருவருக்கு என 5 கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது தலா 3 பேர் வீதம் 15 கலைஞர்களுக்கு இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் அழியும் நிலையில் உள்ள ஜிம்லா மேளம்(எருதுகட்டு மேளம்) கலைஞர்களை மீட்டு அந்த கலைக்கு புத்துணர்ச்சி அளிக்க உள்ளோம். இதற்காக கொடைக்கானலில் மே 24ல் நடக்கும் கோடை விழாவில் அக்கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு கலை பண்பாட்டுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதே போல் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அழியும் நிலையில் உள்ள கொம்பூதி, கட்ட நாயனம் உள்ளிட்ட 50 கிராமியக் கலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அக்கலையில் சிறந்தவர்களுக்கு அரசு விருதுகளில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் மூலம் 120க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 500 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.3000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, என்றார்.