கோவை: அன்னியச் செலாவணி வர்த்தகம் செய்வதாக முதலீட்டாளர்களிடம், 400 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி, துபாய்க்கு தப்பி விட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
கோவை, சுந்தராபுரம், குறிஞ்சி கார்டனில் வசித்தவர் விமல்குமார், 37. இவரது மனைவி ராஜேஸ்வரி, 37. இவர்கள் இருவரும், 'ஆல்பா பாரெக்ஸ் மார்க்கெட்ஸ்' என்ற அன்னியச் செலவாணி வர்த்தகம் செய்யும் நிறுவனத்தையும், 'மிஸ்டர் மணி' என்ற யூடியூப் சேனலையும் நடத்தினர்.அன்னியச் செலாவணி வர்த்தகம் செய்வதற்கான பயிற்சி வகுப்பு நடத்திய இவர்கள், தங்களிடம் பயிற்சிக்கு வருபவர்களிடம் நிதி முதலீடு செய்யுமாறு ஆசை வார்த்தை கூறினர்.
முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி, ஊக்கத்தொகை கிடைக்கும் என்று கூறி, 8,000 பேரிடம், 400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். பணம் முதலீடு செய்தவர்கள், வட்டி, அசல், ஊக்கத்தொகை கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில், தம்பதி தப்பி தலைமறைவாகி விட்டனர். பல்வேறு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர்.மோசடி செய்த தம்பதி, தற்போது துபாயில் இருப்பதை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர்.
தம்பதியை கைது செய்வதற்கான முயற்சி மேற்கொண்டுள்ள போலீசார், அனைத்து விமான நிலையங்களுக்கும், 'லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.