கோவை: கோவை மாவட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள, ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு, 930 கோடி ரூபாய் செலவில், தண்ணீர் எடுத்து செல்லும் திட்டத்திற்கு, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம், திருமூர்த்தி நீர்தேக்கத்தக் திட்டக்குழு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இக்குழு நிர்வாகிகள், நேற்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து, ஆழியாறு அணையில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் தொகுதிக்கு, தண்ணீர் எடுத்து செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி மனு அளித்தனர்.பின், திட்டக்குழுத் தலைவர் பரமசிவம் கூறியதாவது:ஒட்டன்சத்திரத்துக்கு, ஏற்கனவே காவிரியில் இருந்து இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இதுதவிர, பாலாறு - பொருத்தலாறு அணையில் இருந்தும், பரப்பலாறு அணையில் இருந்தும், தலா ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்களை ரத்து செய்துவிட்டு, ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டமிடுகின்றனர்.
ஆழியாறு அணையை பொறுத்தவரை, கேரளாவுக்கும், தமிழகத்திற்கும் இடையே, 1958ல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, ஆழியாறு ஆற்றில் இருந்து, ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி., தண்ணீரை கேரளாவுக்கு வழங்க வேண்டும்; ஆழியாறு பழைய ஆயக்கட்டு பகுதிக்கு, 2.44 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்.ஏற்கனவே, 4.25 லட்சம் ஏக்கர் பாசன விவசாயிகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, தண்ணீரை பகிர்ந்து பாசனம் செய்கிறோம். ஒட்டன்சத்திரம் பகுதிக்கு, வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஆழியாறு அணையில் இருந்து, 100 கன அடி தண்ணீரை கோவை வரை குடிநீருக்காக வழங்குகிறோம்.
இரு மாநில ஒப்பந்தத்தை மீறி, ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் எடுத்து செல்ல, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் 6ம் தேதி, நீர்வளத்துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் துரைமுருகன் இந்த திட்டத்தை செயல்படுத்த சாத்தியமில்லை என அறிவித்தார். அதன்பின், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.எங்கள் பகுதியில், 4.25 லட்சம் பாசன விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் மனு அளித்துள்ளோம். அவர், இப்பிரச்னையை முதல்வரிடம் எடுத்து சென்று, சுமூக தீர்வு காண்பதாக, உறுதி அளித்துள்ளார். எக்காரணம் கொண்டும் தண்ணீரை இழக்க, நாங்கள் தயாராக இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.