ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் நேற்று, 1,200 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 11 வது நாளாக ரசாயன நுரை
தேங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் காலை, 1,040 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை, 1,200 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.49 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், அணைக்கு வந்த, 1,200 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோரங்களில் வசித்து வரும் முத்தாலி, சின்ன கொள்ளு, பெத்த கொள்ளு, பூதிநத்தம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு, வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த, 6 முதல் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த, 10 முதல், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரில் ரசாயன நுரை ஏற்பட்டு, ஆற்றில் தேங்கி வருகிறது. நேற்று அதிகப்பட்சமாக, 1,200 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால், 11 வது நாளாக தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை ஆங்காங்கு தேங்கி காற்றில் பறந்தது. தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசியது.