பா.ஜ., நிர்வாகிகள்
அறிமுக கூட்டம்
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு ஒன்றியம் சார்பில், போச்சம்பள்ளி, தர்மபுரி சாலையில் உள்ள பா.ஜ., ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் மாதேஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், புதியதாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசத்தை, தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 11 பஞ்.,க்கு உட்பட்ட பா.ஜ., நிர்வாகி
களிடம் அறிமுகம் செய்யப்பட்டது.
கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு
நீர்வரத்து அதிகரிப்பு
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து வரும் தண்ணீர் மற்றும் தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், கடந்த, 17ம் தேதி தடுப்பணை நிரம்பியது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 917 கனஅடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
நிரம்பியது பறையப்பட்டி புதூர் ஏரி
அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால், நேற்று பறையப்பட்டி புதூர் ஏரி நிரம்பியது. தொடர்ந்து, ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன், பூஜை செய்து வழிபட்டனர். ஏற்கனவே,
கடந்தாண்டு, நவம்பரில் ஏரி நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.6.34 கோடி
திட்டப்பணிகள் ஆய்வு
தர்மபுரி: தர்மபுரியில் உள்ள, 33 வார்டுகளிலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 6.34 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இவற்றை, சென்னை நகராட்சி மண்டல நிர்வாக இணை இயக்குனர் பூங்கொடிஅருமைகண்ணு ஆய்வு செய்தார். இதில், நகராட்சிகளின் சேலம் மண்டல செயற்பொறியாளர் ராஜேந்திரன், தர்மபுரி நகராட்சி பொறியாளர் ஜெயசீலன்
உள்பட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கோபிநாதம் பட்டியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜூன், 9ம் தேதி நடக்கிறது. இதில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்.அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் புதுப்பட்டியில் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி ஆலோசனை வழங்கினார்.
தி.மு.க., ஓராண்டு சாதனை
விளக்க பொதுக்கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கடத்தூர் பஸ் ஸ்டாண்டில் தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடந்தது. நகர செயலாளர், டவுன் பஞ்., தலைவர் மணி வரவேற்றார். குடியாத்தம் குமரன், செங்கை தாமஸ் பேசினர். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சத்தியமூர்த்தி, டாக்டர் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் முனிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யானை தாக்கியதில்
காளை மாடு பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து, சானமாவு காப்புக்காட்டில் இரு யானைகள் நேற்று அதிகாலை இடம் பெயர்ந்தன. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், கெலமங்கலம் அடுத்த பூனப்பள்ளி கிராமம் அருகே ஏரியை கடந்த போது, ஒரு யானை மட்டும் தனியாக பிரிந்து வந்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ், 50; என்பவருக்கு சொந்தமான காளை மாட்டை வயிற்று பகுதியில் தந்தத்தால் குத்தியது. மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. மாட்டை பிரேத பரிசோதனை செய்ய நாகராஜ் தரப்பினர் மறுத்து விட்ட நிலையில், அப்பகுதியில் மாடு அடக்கம் செய்யப்பட்டது.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா, சீங்கோட்டை மலை
கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. ஓசூர் ஆர்.டி.ஓ., தேன்மொழி தலைமை வகித்து, 74 பயனாளிகளுக்கு, 9.21 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, உட்பிரிவு பட்டா மாறுதல் உட்பட மொத்தம், 51 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அஞ்செட்டி தாசில்தார் முருகேசன், தனி தாசில்தார் பூவிதன், வருவாய் ஆய்வாளர் சரிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
தோட்டக்கலை
பண்ணையில் ஆய்வு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மா, பப்பாளி, தென்னை, பனை, நெல்லிக்காய், முருங்கை உள்ளிட்ட பழரக செடிகள் உற்பத்தி செய்யும் பணிகளையும், உற்பத்தி செய்யப்பட்டுள்ள பழரகங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார். தோட்டக்கலை இணை இயக்குநர் பூபதி, துணை இயக்குநர் ராம்பிரசாத், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். திட்ட அலுவலர் சுஜிதா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கொடுஞ்செயல் எதிர்ப்பு
உறுதிமொழி ஏற்பு
அரூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவு நாள் கொடுஞ் செயல் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அரூர் தீயணைப்பு நிலையத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
*கிருஷ்ணகிரி, போலுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சாத்விகா, நிர்வாக
அலுவலர் சரவணன்உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
*கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி
தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
*கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பி.டீ.ஓ., அலுவலகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊத்தங்கரை பி.டி.ஓ.,க்கள் மகேஷ்குமரன், சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
*தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் டவுன் பஞ்., அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளையொட்டி டவுன் பஞ்., தலைவர் மனோகரன் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். துணை தலைவர் சீனிவாசன், செயலாளர் சேகர்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.