ஊட்டி: நீலகிரி சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருி, சிறப்பு மண்டல திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, 34.3 கோடி மதிப்பீட்டிலான, 20 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 56.36 கோடி மதிப்பீட்டில், புதிதாக திறக்கப்படும், 28 கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், 28.13 கோடி மதிப்பீட்டில், 9,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மொத்தம், 9, 500 பயனாளிகளுக்கு 118.79 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நீலகிரி சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருதியும், அதனை பாதுகாக்கவும் தமிழக அரசு சிறப்பு மண்டல திட்டம் உருவாக்கியுள்ளது. மண்டல திட்டம் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தை பாதுகாப்பது தமிழக இயற்கையை பாதுகாப்பது போலாகும். தமிழக வனத்தை பாதுகாப்பது தமிழக அழகை போற்றுவதாகும். நீலகிரி நிலத்தை அரசு நிச்சயம் காக்கும். மலைகளோடு மக்களையும் நிச்சயம் காக்கும்.
வளர்ச்சி என்பது அனைத்து உயிர்களையும் உள்ளடக்கிய அரசு. மாநிலத்தின் வனபரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நிய தாவரங்களை அகற்ற ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. முதுமலை தெப்பக்காடு வளாகத்தில், அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம், சுற்றுச்சூழல் மையம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உறுதி திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
முன்னதாக, ஊட்டி பஸ் ஸ்டாண்டில் ராஜிவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் ஊட்டியை கண்டறிந்த ஜான் சலீவனுக்காக அமைக்கப்பட்ட வெண்கலம் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.