தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் தேங்காய் சாகு
படியில், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் விளையும் தேங்காய், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த, இரண்டு ஆண்டுகளாக பருவமழை சராசரி அளவுக்கு மேல் பெய்ததால், தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், தேங்காய்க்கு கடந்தாண்டை விட, நடப்பாண்டு குறைந்தளவே விலை கிடைக்கிறது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து, தேங்காய் விற்
பனைக்கு வருவதால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, தென்னை விவசாயிகள் கூறியதாவது:
தமிழகத்தில் நடப்பாண்டு தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், தேங்காயை வெளிமாநிலங்களுக்கு எளிதாக அனுப்ப முடியவில்லை. மேலும், பிற மாநிலங்களில் விவசாயிகள் தென்னை சாகுபடியில் இறங்கியுள்ளனர்.
ஒட்டு ரக தென்னை சாகுபடியில், குறைந்த ஆண்டுகளில், அதிகப்படியான மகசூல் கிடைக்கிறது. இதனால், தமிழகத்தில் இருந்து தேங்காயை, பிற மாநிலங்கள் எதிர்பார்ப்பது இல்லை. இதனால், தமிழகத்தில் தேங்காய் தேக்கம் அடைந்து, விலை குறைந்துள்ளது. கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் முதல் தர தேங்காய், மொத்த விலையில், 15 முதல், 18 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, 12 முதல், 15 ரூபாய் தான் விற்பனையாகிறது. இது தென்னை விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.