பயனற்ற நிலையில்
சின்டெக்ஸ் தொட்டி
கரூர், மே 21-
கரூர் அருகே, கணபதிபாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. அதில் அப்பகுதி மக்கள் தங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். தற்போது, குழாய் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்து நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, குழாயை மாற்ற வேண்டும் அல்லது புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காவிரி குடிநீர் வழங்க
பொதுமக்கள் வேண்டுகோள்
கடவூர், மே 21-
கடவூர் அருகே, பாறைப்பட்டி காலனி பகுதிக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தண்ணீருக்காக அருகில் உள்ள விவசாய நிலங்களின் கிணறுகளுக்கு செல்கின்றனர். மேலும், போர்வெல் குழாய்களிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால், பாறைப்பட்டி காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, நாள்தோறும் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குட்டக்கடை பஸ் ஸ்டாப்பில்
பஸ்சை நிறுத்த கோரிக்கை
கரூர், மே 21-
கரூரிலிருந்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்கு, குட்டக்கடை வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், குட்டக்கடை பஸ் ஸ்டாப்பில் பஸ்சை டிரைவர்கள் நிறுத்துவது இல்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கரூர் மற்றும் கொடுமுடிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, குட்டக்கடையில் பஸ்சை நிறுத்த, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி நகர் பகுதியில்
'ஏர்ஹாரன்' ஒலியால் 'அலறல்'
அரவக்குறிச்சி, மே 21-
அரவக்குறிச்சி நகர் பகுதிக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களின், 'ஏர்ஹாரன்' ஒலியால் மக்கள் அலறியடித்து செல்கின்றனர்.
அரவக்குறிச்சி நகர் பகுதியில் அரசு மற்றும் தனியார் வங்கிகள், பள்ளிகள், வட்டார போக்குவரத்து துணை ஆய்வாளர் அலுவலகம், மருத்துவமனை, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அவ்வழித்
தடத்தில் துாத்துக்குடி, மதுரை, திருச்சி, நாகூர், சேலம், ஈரோடு, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு எண்ணற்ற பஸ் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
நகர் பகுதிக்குள் வந்து செல்லும் கனரக வாகனங்கள் எழுப்பும், 'ஏர்ஹாரன்' ஒலியால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பயத்தில் அலறியடித்து செல்கின்றனர். எனவே, 'ஏர்ஹாரன்'களை பறிமுதல் செய்ய
வேண்டும்.
சாலையில் தேங்கிய மழையால்
சிரமத்துக்குள்ளாகும் மக்கள்
அரவக்குறிச்சி, மே 21-
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நகர் பகுதியில் தேங்கிய மழைநீரால் மக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர். பஸ் ஸ்டாண்டிலிருந்து, தாராபுரம் செல்லும் சாலையில், அரசு அலுவலகங்கள் உள்ளடக்கிய யூனியன் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. அப்பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால், அலுவலக வேலையாக வருபவர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்ள பஸ் ஸ்டாண்டிற்கு வருபவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மீது, தேங்கி நிற்கும் மழைநீர், கனரக வாகனங்களின் டயர்களில் பட்டு மேலே தெறிக்கிறது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, அப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள பள்ளங்களுக்கு மண் கொட்டி சாலையை சீரமைக்க வேண்டும்.
தோண்டப்பட்ட குழி
மூடாததால் அச்சம்
கிருஷ்ணராயபுரம், மே 21-
மேலசிந்தலவாடி புதிய கட்டளை வாய்க்கால் அருகே, குடிநீர் குழாய் செல்லும் வழியில் உள்ள குழிகள் மூடாமல் இருப்பதால், மக்கள் அச்சத்துடன் சென்று
வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேல சிந்தலவாடி புதிய கட்டளை வாய்க்கால் வழியாக காவிரி கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் பழுது ஏற்பட்டபோது, குழி தோண்டப்பட்டு குழாய் பழுது சரி செய்யப்
பட்டது.
அதன்பின், தோண்டப்பட்ட குழியை மூடாமல் விட்டதால், அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, குழிகள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.