சென்னை: அரசின் மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறும் பயனாளிகள் பட்டியலில், 18 ஆயிரம் குடும்பங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
கடல் உயிரிகளின் இனப் பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், கிழக்கு கடற்கரை பகுதிகளில், ஏப்., 15 முதல் ஜூன் 14 வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையும், மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது.மீன்பிடி தடையால் பாதிக்கப்படும், மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2021ல், 1.71 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு, 85.6 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
தற்போது, கிழக்கு கடற்கரை சாலையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. நடப்பாண்டில் பயனாளிகள் பட்டியலில், 18 ஆயிரத்து 740 மீனவ குடும்பங்கள் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளன. அதன்படி, 1.90 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணமாக, 95 கோடி ரூபாய் விரைவில் மீனவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.