அரசு பஸ் மீது லாரி மோதி
விபத்து: 4 பேர் படுகாயம்
குளித்தலை, மே 21-
குளித்தலை அடுத்த, வீரணம்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி, 35; அரசு பஸ் கண்டக்டர். இவர், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணியளவில், கரூரிலிருந்து, மாயனுார் நோக்கி வந்த அரசு டவுன் பஸ், கிளிசாநத்தம் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி, பயணிகளை இறக்கி கொண்டிருந்தார். அப்போது, கரூரிலிருந்து பின்னால் வந்த லாரி, அதிவேகமாக வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் பயணித்த கல்யாணி, வள்ளிமயில், கவிதா, வசந்த் ஆகிய, 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, பஸ் கண்டக்டர் முத்துசாமி கொடுத்த புகார்படி, லாரி டிரைவர் திருவாரூர் மாவட்டம், பள்ளிவாசல், சமத்துவபுரத்தை சேர்ந்த கருணாநிதி, 50, என்பவர் மீது, மாயனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சைபர் கிரைம் விழிப்புணர்வு
கூட்டம்: எஸ்.பி., பங்கேற்பு
கரூர், மே 21-
கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், விழிப்புணர்வு கூட்டம், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், ஆன்லைன் மோசடி, லோன் மோசடி, ஓ.டி.பி., மோசடி, சமூக வலைதள வர்த்தக மோசடிகள் குறித்து, பெண்கள் சமூக வலைதளங்களில் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து எஸ்.பி., சுந்தர வடிவேல் விளக்கம் அளித்து பேசினார். அதை தொடர்ந்து, மொபைல் போனை தொலைத்த, 124 பேருக்கு மொபைல் போனும், ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த, ஐந்து பேருக்கு பணமும் மீட்டு தரப்பட்டது. கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் ராதாகிருஷ்ணன், கண்ணன், கீதாஞ்சலி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ., ராஜசேர்வை உள்பட பலர் பங்கேற்றனர்.
பாரதிதாசன்
பிறந்தநாள்
கவிதை போட்டி
கரூர், மே 21-
கரூர் அரசு அருங்காட்சியகத்தில், பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, கவித்துாவல் என்ற தலைப்பில், கவிதை போட்டிகள், நேற்று நடந்தன. அதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முனைவர் மணிமாறன் பரிசு வழங்கி, பாரதிதாசன் என்ற தலைப்பில்
பேசினார்.
அப்போது, கரூர் அரசு கலைக்கல்லுாரி தமிழ்துறை தலைவர் சுதா, அருங்காட்சியக காப்பாட்சியர் மணிமுத்து, அன்பு, ஸ்டாலின் உள்பட பலர் உடனிருந்தனர்.
பஞ்சப்பட்டியில் பா.ஜ.,
கட்சி விளக்க கூட்டம்
கிருஷ்ணராயபுரம், மே 21-
கிருஷ்ணராயபுரம் பா.ஜ., கிழக்கு ஒன்றியம் சார்பில், பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே மத்திய அரசின் சாதனைகள் குறித்த விளக்ககூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சாமிதுரை தலைமை வகித்தார்.
இதில், பா.ஜ., கட்சி சார்பில் மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரதமர் வீடு கட்டும் திட்டம், விவசாயிகளுக்கு உதவித்தொகை, கொரோனா காலத்தில் உதவிகள், தொடர்ந்து மக்களுக்கு தேவையான திட்டம் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. என விளக்க கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட பொது செயலாளர் நவீன்குமார், மாவட்ட துணை தலைவர் செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர் பாரதிதாசன், ஒன்றிய பொருளாளர் பிச்சைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாரியம்மன் கோவிலில்
பக்தர்கள் பால்குடம்
கிருஷ்ணராயபுரம், மே 21-
சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, விட்டுகட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்தவர்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
இதில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 22ல் அம்மன் திருத்தேரில் பவனி மற்றும் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கிருஷ்ணராயபுரத்தில்
தெருநாய் தொல்லை
கிருஷ்ணராயபுரம், மே 21-
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,ல் தெருநாய்கள் துரத்தி கடிக்க வருவதால், மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட கரூர்-திருச்சி நெடுஞ்சாலை, நடுஅக்ரஹாரம், மஞ்சமேடு, பகவதியம்மன் தெரு ஆகிய இடங்களில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் மக்களை துரத்தி கடிக்கின்றன. இதனால் சாலை வழியாக மக்கள் நடந்து செல்லும்போது அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, டவுன் பஞ்சாயத்து பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமராவதி வியாபாரிகள்
சங்க பொதுக்குழு கூட்டம்
கரூர், மே 21-
கரூரில், அமராவதி வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரூர் அமராவதி வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது. அதில், சொத்து வரியை குறைக்க வேண்டும். மாநகராட்சியில், கட்டடங்களின் பயன்பாடு அடிப்படையில் வரி விதிக்க வேண்டும். அதிக அளவில் குப்பை வரி வசூல் செய்வதை ஆட்சேபிக்கிறோம். மத்திய அரசு நுால் விலையை குறைக்க வேண்டும். கரூர் மாநகராட்சி பகுதிகளில், சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், துணை தலைவர்கள் தெய்வ சேனாதிபதி, முத்துராமன், செயலாளர் சிவசங்கர், பொருளாளர் மகேஷ்குமார், மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.
கிராம உதவியாளர் வீட்டில்
தங்க நகை, பணம் திருட்டு
கரூர், மே 21-
க.பரமத்தி அருகே கிராம உதவியாளர், வீட்டில் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி குளத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன்; இவரது மனைவி கீதா, 38; தும்பிவாடியில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த, 11ல் வீட்டை பூட்டி விட்டு, கீதா வெளியில் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, முன்றே முக்கால் பவுன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாயை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, கீதா அளித்த புகார் படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
குளித்தலையில் வரும் 26ல்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கரூர், மே 21-
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 26ல் நடைபெற உள்ளது என, கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 26ல் காலை, 11:00 மணிக்கு குளித்தலை அண்ணா மண்டபத்தில் நடக்கிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். அதே கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.