கரூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை, வாகனங்களில் வலை கட்டாமல் கொண்டு செல்லப்படுகிறது. இதனால், சாலையில் கொட்டப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, 48 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பையை, வாங்கல் சாலையில் உள்ள கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதை தவிர, நகராட்சி பகுதிகளில் பல இடங்களில், குப்பையை கொட்டி பிரித்து, உரமாக்கும் பணிகளும் நடக்கிறது.
இந்நிலையில், கரூர் மாநகராட்சியின் பல இடங்களில், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பை, வாகனங்களில், வாங்கல் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த வாகனங்களில், மேல் பகுதியில் வலை கட்டாமல், டிரைவர்கள் எடுத்துச் செல்கின்றனர். இதனால், சாலை முழுவதும் குப்பை விழுந்த வண்ணம் உள்ளதால், மக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
கரூர் மாநகராட்சி பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், சாலையில் விழும் குப்பை அழுகி, துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
பலமான காற்று அடிக்கும்போது, குப்பை சாலையில் பறந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கரூர் மாநகராட்சி பகுதிகளிலிருந்து, குப்பையை எடுத்துச்செல்லும் வாகனங்களில், வலை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.