'கமிஷனுக்காகவே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ?' என சந்தேகம் எழுந்துள்ளதாக, பா.ஜ., நிர்வாகி தெரிவித்தார்.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 2.07 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மொத்தம், 120 மைல் நீளம் கொண்ட கீழ்பவானி வாய்க்காலில், 720 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் அமைக்கப்படவுள்ளது. இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கேயம் அருகே திட்டுப்பாறையில், கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகளை, பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், நேற்று சந்தித்து திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது திட்டுப்பாறையில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி, உறுதித்தன்மை குறித்து அறிந்து கொள்ள, விவசாயிகளுடன் அரை கி.மீ., துாரம் நடந்து சென்றார். பின், கான்கிரீட் கால்வாயாக மாற்றி அமைக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
பின் அவர் கூறியதாவது:
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைப்பது குறித்து, விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. வாய்க்காலை துார்வாருவது குறித்தும், வாய்க்காலின் தன்மை குறித்தும் எவ்வித ஆய்வும் செய்யாமல் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாய்க்காலின் இரு கரைகளிலும் உள்ள, நான்கு லட்சம் மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து, எவ்வித அக்கறையும் காட்டாமல், விவசாயிகளின் நலனுக்காக திட்டம் இல்லாமல், கமிஷனுக்காக திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து மாநில தலைவருடன் ஆலோசித்து, முதல்வரை சந்தித்து முறையிடப்படும். வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க வேண்டாம் என விவசாயிகள் கூறுவதை, பா.ஜ., முழுமையாக ஆதரித்து, அவர்களுடன் துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.