முறையீடு செய்ய வந்த விவசாயிகளை பார்த்து, காங்கேயம் தாசில்தார் வாகனத்தை திருப்பி சென்றதால், ஏமாற்றம் அடைந்தனர்.
தாராபுரம், -ராசிபாளையம் முதல், தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை, விளைநிலங்கள் வழியே உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கடந்த மார்ச், 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது சமாதானம் பேசிய காங்கேயம் தாசில்தார் ஜெகதீஷ்குமார், 'தாராபுரம் ஆர்.டி.ஓ., தலைமையில் முடிவு எடுக்கப்பட்டு, ஒரு வாரத்தில் உரிய இழப்பீடு வழங்கப்படும்' என்று கூறவே, போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், 50 நாட்களை கடந்த பிறகும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், 50-க்கும் மேற்பட்டோர், காங்கேயம் தாசில்தாரிடம் முறையீடு செய்ய, அலுவலக வளாகத்துக்கு நேற்று காலை வந்தனர். அப்போது வெளியில் சென்று விட்டு வந்த தாசில்தார் ஜெகதீஷ்குமார், விவசாயிகளை பார்த்தும் வாகனத்தை திருப்பிக் கொண்டு, சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், அலுவலக வாசலில் அமர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தாசில்தார் ஜெகதீஷ்குமார் கூறியதாவது: காங்கேயம்--பாப்பினி அருகே நீருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வதற்கு, மடவிளாகம் பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காத்திருந்தனர்.
அங்கு ஆய்வு செய்யவிருந்ததால் செல்ல வேண்டியதாகி விட்டது. விவசாயிகளை பார்த்ததும் காரை திருப்பிக்கொண்டு செல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே ஜூன், ௨ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண தாசில்தார் கூறியிருப்பதாக, தாலுகாக அலுவலக ஊழியர்கள் தெரிவிக்கவே, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.