கோவை: பெற்றோர் திட்டியதால் கோபித்துக் கொண்டு கோவை வந்த மருத்துவ மாணவி ஒருவர், பள்ளி மாணவியர் மூவர் என நால்வரை போலீசார் மீட்டனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவியர் மூவர், அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். சரியாக படிக்காததால் மூவரது பெற்றோரும் கண்டித்துள்ளனர். இதை விரும்பாத மாணவியர் மூவரும், கோவை சென்று மில்லில் வேலைக்கு சேர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில், வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து பஸ்சில் கோவை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த மாணவியரை கண்டு சந்கேகம் கொண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தெரிவித்தனர். விசாரணையில் மாணவியர் மூவரும், வீட்டில் இருந்து தப்பி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். நேற்று காலை, பெற்றோர் வந்து அழைத்துச் சென்றனர். போலீசார், மாணவியருக்கும், பெற்றோருக்கும் தகுந்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதேபோல, சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவி, செமஸ்டர் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். கோபமுற்ற அவர், வீட்டில் இருந்து புறப்பட்டு கோவை வந்துள்ளார். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இரவு நேரத்தில் நின்றிருந்த அவரை மீட்ட ரோந்து போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.