''அ ந்த காலத்தில் திராவிட கருத்துக்களை பேசியவர்கள் கூட, டி.வி.ஆர்., போல் தீவிரமான சமூக சீர்திருத்த கருத்துகளை பேசவில்லை,'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ராஜேஷ் கோவிந்த ராஜூலு.
வரலாற்று ஆய்வு அதிக ஆர்வம் கொண்டவர், கோவையை சேர்ந்த ராஜேஷ் கோவிந்த ராஜூலு. கொங்கு நாட்டு வரலாற்றை ஆவணப்படுத்தி, அதை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என, ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.இப்போது 'தி வெராண்டா கிளப்.காம்' என்ற இணையதளத்தில், 'பில்டர் காபி வித் ராஜேஷ் கோவிந்த ராஜூலு' என்ற நிகழ்ச்சி வாயிலாக, சிறந்த நுால்களை அறிமுகம் செய்து வருகிறார். வரும், 27 ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு, தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் வாழ்க்கை வரலாற்று நுாலான 'கடல் தாமரை' நுால் குறித்து கருத்துரை வழங்க உள்ளார். இதுகுறித்து, ராஜேஷ் கோவிந்தராஜூலுவிடம் பேசிய போது, ''நான் இதுவரை பல புத்தகங்கள் பற்றி பேசி இருந்தாலும், டி.வி.ஆர்.,ன் 'கடல் தாமரை' வாழ்க்கை வரலாற்று நுாலை, மிக சிறந்த நுாலாக பார்க்கிறேன். இந்த நுாலை நான் முழுமையாக படித்து முடித்த போது, மிகவும் பிரமிப்பாக இருந்தது. மக்களிடம் சமூக சிந்தனையையும், ஒற்றுமையையும் உருவாக்க வேண்டும் என்பற்காகவே, தினமலர் நாளிதழை துவங்கி இருக்கிறார். நாஞ்சில் நாட்டுப்பகுதியில் பிறந்து வளர்ந்த பிராமண வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு, இவ்வளவு தமிழ் பற்றும், சீர்திருத்த சிந்தனையும் இருப்பது வியப்பளிக்கிறது.