கோவை:வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழாவில், விவசாயிகள் பங்கேற்க மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழா வரும், 23ம் தேதி நடக்க உள்ளது.
மாவட்டத்தில் உள்ள, 37 ஊராட்சிகளில், இத்திட்டம் துவக்க விழா நடக்க உள்ளது.வேளாண், உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, விதைச்சான்று, அங்கக சான்றளிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து, வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
விழாவில் வேளாண் துறை மூலம், நெட்டை தென்னங்கன்றுகள், பயறு வகை விதைகள், கைத்தெளிப்பான், விதைத்தெளிப்பான், வீட்டுத்தோட்டம் அமைக்க தளைகள், தோட்டக் கலைப்பயிர் சாகுபடி செய்ய ஊக்கத் தொகை வழங்குதல், பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டிக் டிரம், பழச்செடிகள், பழக்கன்றுகள் உள்ளிட்டவை வினியோகிக்கப்பட உள்ளன. இதை கருத்தில் கொண்டு, அனைத்து விவசாயிகளும் விழாவில் பங்கேற்று பலன் அடைய, மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.