பல்லடம்:காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதியில், அதிக அளவிலான கல்குவாரிகள், கிரஷர் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தயாராகும் ஜல்லிகள், துகள்கள் உள்ளிட்டவை, டிப்பர் லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கின்றன.இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:காரணம்பேட்டை -- சோமனுார் ரோடு, பொள்ளாச்சி - மைசூரை இணைக்கிறது.
இவ்வழியாக, சரக்கு லாரிகள், கண்டெய்னர்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை அதிகளவில் வந்து செல்கின்றன.போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் செல்லும் டிப்பர் லாரிகள், விதிமுறை மீறி ததும்ப ததும்ப ஜல்லி கற்களை ஏற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இவற்றிலிருந்து விழும் ஜல்லிகள், துகள்கள் உள்ளிட்டவை, ரோடெங்கும் பரவுகின்றன. இவற்றால், தார் சாலையாக உள்ள சோமனுார் ரோடு, பாதிக்கு மேல் மண் ரோடாக மாறிவிட்டது.
நான்கு சக்கர வாகனங்களுக்கு வழிவிட்டு ரோட்டோரமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மண் திட்டுகள், ஜல்லி கற்களில் சிக்கி தடுமாறி கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது. காற்றில் புழுதி கிளப்பும் மண் துகள்கள், வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.குறிப்பிட்ட அளவுக்கு மேல் லோடு ஏற்றிச் செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அதனை லாரி டிரைவர்கள் பின்பற்றுவதில்லை.அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால், நெடுஞ்சாலை மண் ரோடாகவே மாறிவிட்டது. விபத்து நடக்கும் முன், ரோட்டில் பரவிக்கிடக்கும் மண் திட்டுகள், ஜல்லிகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.